சிட்னியில் மழை பெய்ததால்…….! எங்கள் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது!

சிட்னியில் மழை பெய்ததால் விளையாடாமலேயே வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி கப்டன் ஹீதர் நைட் கடும் வேதனை அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது.

முதல் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் முதல் இடம் பிடித்த இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மழை பெய்யும் என்பதால் ரிசர்வ் டே தேவை எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை மறுத்துவிட்டது.

இந்நிலையில் விளையாடாமலேயே வெளியேறியதால் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் மனமுடைந்துள்ளனர். இந்நிலையில் எங்கள் நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹீதர் நைட் கூறுகையில் ‘‘விதி அப்படி இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளனர். முக்கியமான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு விட்டது. வருங்காலத்தில் விதிமுறைகள் மாற்றப்படும் என்று நம்புகிறோம். அதை நோக்கி நகர வேண்டும். மற்ற அணிகளுக்கு இதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள தற்போ எங்களுக்கு கடினமாக உள்ளது’’ என்றார்.