படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுகின்றது- சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு
கொரோனாவைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகமாக காணப்படுவது சிங்கப்பூர் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
தரைகளையும் கழிவறைகளையும் சுத்தம் செய்வதற்கு வழமையாக பயன்படுத்தும் தொற்றுநோய் நீக்கிகள் மூலம் நாளொன்றிற்கு இரண்டு தடவை சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ்களை அழிக்கலாம் எனவும் சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
சீனாவில் நோயாளிகள் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் மூலம் நோய் கிருமிகள் அதிகளவில் பரவியதை தொடர்ந்து இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
சிங்கப்பூரின் தொற்றுநோய்கள் குறித்த தேசிய நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
ஜனவரி முதல் பெப்ரவரி முதலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகளை மையமாக வைத்து அவர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு வாரத்தில் ஐந்து நாட்கள் அவர்களின் குருதி மாதிரிகளை வைத்தியர்கள் சேகரித்துள்ளனர்.
ஒரு நோயாளி தங்கியிருந்த அறையில் குருதி மாதிரிகளை எடுப்பதற்கு முன்னர் அந்த அறையை சுத்தம் செய்துள்ளனர்.
ஏனைய இரு நோயாளிகளிடமும் குருதி மாதிரிகளை எடுத்த பின்னர் அறைகளை சுத்தம் செய்துள்ளனர்.
அறையை சுத்தம் செய்யப்படுவதற்கு முன்னர் குருதி மாதிரிகள் எடுக்கப்பட்ட நோயாளி சிறிதளவே நோய் தொற்றை வெளிப்படுத்தியுள்ளார்,அவருக் இருமல் மாத்திரம் காணப்பட்டுள்ளது.
குருதி மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர் அறை சுத்தம் செய்யப்பட்ட நோயளிகள் இருவரும் இருமல் காய்ச்சல் சுவாசப்பிரச்சினை போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான வித்தியாசம் காணப்படுகின்ற போதிலும் குருதி மாதிரி எடுக்கப்பட்ட பின்னர் சுத்தம் செய்யப்பட்ட நோயாளியின் அறைகளில் கதிரை ஜன்னல்கள் மற்றும் பல பொருட்களில் நோய்தொற்று காணப்பட்டுள்ளது.
கழிவறைகளிலும் நோய்தொற்று காணப்பட்டுள்ளது.இதன் மூலம் கழிவறைகளே கொரோன வைரஸ் தொற்றுவதற்கான இடமாக காணப்படுவதற்கான அதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சுத்தம் செய்யப்பட்ட பின்னர் குருதிமாதிரிகள் சேகரிக்கப்பட்ட இரு அறைகளில் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.