மேற்கு ஆஸ்திரேலியா கடல் பகுதி அருகே 8 வெளிநாட்டினருடன் சென்ற ஆட்கடத்தல் படகு இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த 8 பேரையும் சட்டவிரோத குடியேறிகளாக ஆஸ்திரேலிய அரசு சந்தேகிக்கும் நிலையில், இவர்கள் சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின்றது.
இதன் மூலம், 2013ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் கீழ் திருப்பி அனுப்பப்பட்ட 38வது ஆட்கடத்தல் படகு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஆட்கடத்தல் தடுப்பதற்கான தேவையையும் கடலில் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பதையும் தடுக்க மீண்டும் உணர்த்தியிருக்கிறது எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர்.
2013ம் ஆண்டு முதல் இதுவரை 38 படகுகளில் வந்த 873 பேர் வந்த நாட்டுக்கு அல்லது புறப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுபப்பட்டுள்ளனர். அதே சமயம், தற்போது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்களில் எத்தனை பேர் தஞ்சக்கோரிக்கையாளர்கள் என்பது உறுதிசெய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான- சட்டவிரோதமான பயணங்கள் மூலம் 1,200 பேர் இறந்துள்ளதை சுட்டிக்காட்டிய பீட்டர் டட்டன், “கடந்தகால சூழ்நிலைகளுக்கு திரும்புவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.