சிட்னியில் அரங்கேறிய புகழேந்தி நாடகம்!

29.02 2020 அன்று சிட்னிவாழ் இளைஞர்களினால் நடாத்தப்பட்ட “புகழேந்தி” என்ற தமிழ் இலக்கிய நடையிலான, ஏறக்குறைய அறுபது பேருக்குமேல் பாங்குபற்றிய, ஒரு வரலாற்று மேடை நாடகத்தை கண்டுகளித்தேன். கண்டேன், களித்தேன், சிரித்தேன் அழுதேன் ஆனந்தமடைந்தேன். எமக்கென்றோரு வலுவான தளம் இல்லையே என்ற கவைலையோடும் அக்கறையோடும் திரைத்துறையில் பயணிக்க முயன்ற, ஆரம்பித்த எனக்கு, இதுவரை பயணம் செய்து பெரியதொரு வெற்றியடையாமல், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் வலுவான தளத்தை உருவாக்க முடியாமல் மறைந்த பலர்போல் எனது முயற்சியும் வாழ்க்கையும் முடிந்து விடுமோ என்ற ஐயத்தோடு இருந்த எனக்கு, இல்லை நாம் இருக்கிறோம், எங்களால் முடியும், நாம் நிறைவேற்றுவோம் என்று கூறியது போல் இருந்தது இந்த இளைஞர்களின் படைப்பு. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய பெரும்பாலான இளைஞர்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இளைஞர்களின் கலைப்பயணம் என்பது அவர்களுடைய கல்விபுரியும் காலங்களில் அந்தந்த கல்விக்கூடங்களுக்குரிய குழுக்களால் ஆண்டுக்கொருமுறை நடாத்தப்படும் கலைநிகழ்ச்சிகளோடு முடிந்துவிடும், ஆனால் கல்வியை முடித்துவிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கும் தருணத்தில், கடினங்களையும் கடமைகளையும் தாண்டி, கலை ஆர்வத்தை தாண்டி ஒரு சமுதாய உணர்வுடன், தமிழ் மொழிமீது உள்ள பற்றை இலக்கியதமிழில் ஒரு சரித்திர நாடகத்தை, குறிப்பிடத்தக்க, குறிப்பிட முடியாத பல இன்னல்களைத்தாண்டி, பலத்த கடினத்தோடு, பல மாதங்கள் கடின பயிற்சி எடுத்து, அதில் பெரியவர்களையும் சேர்த்து, அவர்களை தகுந்த வகையில் உரிய இடத்தில் உபயோகித்து, பல ஆயிரம் பணத்தை செலவுசெய்து, ஒரு நெருக்கடியான சனிக்கிழமை, அரங்குநிறைந்த நிகழ்வாக வெற்றிகரமாக மேடையேற்றி, வெற்றியும் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது வெறும் பாராட்டுக்குரிய ஒரு விடயம் அல்ல. இந்த இளைஞர்கள் தமிழ் மொழியையும், கலை கலாச்சாரத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்வார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களை உற்சாகப்படுத்தி இவர்கள் மேலும் மேலும் படைப்புகளை படைக்கவும், சாதனைகளை புரியவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டியது சமுதாயத்தில் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

இந்நாடகத்தின் கதாசிரியர் திவ்யா ஸ்ரீதரனுடைய கற்பனைத்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. அரைத்த மாவை அரைப்பது போல் இல்லாது, குறிப்பிட்ட ஒருசில வரலாற்று நாடகங்களுக்கு மாறுபட்ட ஒரு தனித்துவமான கதையை சிந்தித்த அவருக்கு வாழ்த்துக்கள். வயதை தாண்டிய பொறுப்பும், பொறுமையும், கலைத்திறனும், சமுதாய உணர்வும், திறமையும் ஆளுமையும் கொண்ட ஆதித்தன் திருநந்தகுமாரை பார்த்து வியந்துபோனேன் . நாடகத்தை இயக்கியதோடு வானவராயன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்த ஆதியின் ஆற்றல் பாராட்டுக்குரியது. துணை இயக்குனர் ஜனார்தன் குமரகுருபரன், வரமேஷனன் எனும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். அருள் இனியனாக நடித்த அவினாஷ் தனபாலனின் தமிழ் உச்சரிப்பும் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது. கதாநாயகி வேதவல்லி கதாபாத்திரத்தில் நடித்த நிஷிதா ஸ்ரீதரனின் வீரமான நடிப்பும் நடனமும் போற்றுதலுக்குரியது.

பவளக்கொடி கதாபாத்திரத்தில் நடித்த திவாஷினி ரமேஷின் கதைப்பேசும் கண்களும், துள்ளலாட்டமும், ஒரு மான்குட்டியே மேடையில் துள்ளித்திரிந்தது போல், அரங்கையே அதிரவைத்தது. ருத்திரன் வேடத்தில் நடித்த பிரஜன் யோகராஜாவின் நடிப்போ வீரம், காதல், பாசம், இவை எங்கெங்கு வேண்டுமோ அங்கங்கு அளவாக வாசம் வீசியது. அங்கயற்கண்ணி வேடத்தில் தாங்கி நடித்த அருந்ததி குமணனின் நடிப்பு, குறிப்பாக, அவருடைய உருமாற்றுகை காற்சி, பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. வசுந்திராவாக நடித்த சரண்யா தியாகராஜாவின் காதல் காட்சிகள் அனைவரையும் கவரும் வண்ணமும், சோகக்காட்சிகள் கலங்கும் வண்ணமும் மெருகூட்டியது.

அருந்ததியாக நடித்த சிறுமி அஸ்விதா ஸ்ரீதரணில் சுட்டித்தனமும் கண்ணீர் காட்சிகளும் ரசிகர்களை கூட கண்கலங்க வைத்தது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த மிது, குமரன், மற்றும் பாண்டி இவர்களின் நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இவர்களுடன் ரஞ்ஜீவ் கிருபராஜா, சஞ்சனா சிவசோதிராஜா, மாதுமை கோணேஸ்வரன் , மதுமிதா சந்திரஹாசன், மற்றும் அணைத்து இளைஞர்களும், நடனக்குழுவினருடைய நடிப்பும் நடனமும் மேடையை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியது, இவர்களுடன் இணைந்து அனுபவம்மிக்க நடிகர்கள் திரு பாலசிங்கம் பிரபாகரன், திரு பாலசுந்தரம் ஸ்ரீபாலன், திரு நடராஜா கருணாகரன், திரு ஷான் குமரலிங்கம் மற்றும் ரத்னாம்பாள் சர்வேஸ்வரன் ஆகியோரின் சிறப்பான நடிப்போ அவர்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அமைந்ததோடு அவர்களின் அனுபவத்தையும் பிரதிபலித்தது.

பாடல் காட்சிகள் கண்ணை கவரும் வண்ணம் இருந்தது. பாடல்கள் தேர்வோ காட் ச்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது. பின்னணி இசைக்கலைஞர்களின் இசை காட்சிகளுக்கு வலுவாக இருந்தது. சிறுமி சிவாணி இளங்கோவின் தமிழ்தாய் வாழ்த்து, பின், அச்சிட்டதுபோல் நான்கு சிலைகள் மேடையில் அபிநயம் புரிந்ததுபோல் சிவம் நடன பாடசாலை மாணவர்களின் நடனத்தோடு ஆரம்பித்த நிகழ்ச்சியின் பின் புகழேந்தி நாடகத்திற்குள் நுழைந்தது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒவ்வொரு காட்சிகளும் சலிப்புத்தன்மை இல்லாது விறுவிறுப்பாக காட்சியமைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குபின் ஒரு தரமான படைப்பை பார்த்துக்களித்த நிறைந்த மனதோடு வாழ்த்துக்களை குவித்துவிட்டு ரசிகர்கள் விடைபெற்றனர். சிங்கக்குட்டிகள் களம் இறங்கிவிட்டது, இனி கலக்கமில்லை என்ற நிறைவோடு நாமும் வீடு திரும்பினோம். நேர்த்தியான ஒருங்கமைப்பு, தீவிரமான கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, இவை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது மொழியையும், கலை, கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல பல யுத்திகளை செயல்பாடுகளையும் செய்துவருகிறார்கள். தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறார்கள், இருப்பிணும் இந்திய கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் ஆதரவு உள்ளூர் கலைஞர்களுக்கு கிடைக்கிறதா என்றால் அது ஒரு கேள்விக்குறி என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு நிகழ்ச்சிகளின் தரம், ரசிகர்களின் மனநிலை இரண்டுமே காரணம் என்றுதான் கூறவேண்டும். கலைஞர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் தனித்தனி தடத்தில் தனித்தனி வெற்றியை நோக்கிய ஒரு பாதையிலேயே பயணிக்கிறார்கள் எனலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கலை ஒரு துறையாகவோ கலைஞர்கள் கலையை ஒரு துறையாகவோ கொள்ள முடியாததற்கு இதுகூட ஒரு காரணம் எனலாம். கலையை கற்பிக்கும் ஆசிரியர்கள், கூடங்கள் இருக்கலாம், அனால் ஒரு கலைஞன் முழுநேர வேலையாக தனது கலையை கொண்டிருக்கிறானா என்பது கேள்விக்குறிதான். கலை ஒரு துறையாக வளர்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். துறையை வளர்க்கவேண்டுமென்றால் கலைஞர்களும், ஒருங்ககிணைப்பாளர்களும் தனித்தனி தடத்தில் பயணிக்காது, இதையொரு குழுவாக, தொடரோட்டம்போல் செயல்பட்டால்தான் சாத்தியமாகும். விதை அமைப்பும் புகழேந்தி குழுவினரும் இதற்கு விதையாக இருப்பார்கள் என்பது உறுதி.

கலை, ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாத விசாலமான வார்த்தை, கலைஞன், படைப்பாளி, இவ்விரண்டு வார்த்தைகளும் கலையுடன் தொடர்புடைய வார்த்தைகள் மட்டுமல்ல, தாய், சேய் உறவுள்ள வார்த்தைகள் எனலாம். ஒவ்வொறு படைப்பாளிக்குள்ளும், முக்கியமாக கதாசிரியர், இயக்குனர், இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு தாய் மறைந்திருக்கிறாள் என்றால் மிகையாகாது. சமூக, சமுதாய, கலாசார அக்கறையுள்ள எந்த ஒரு படைப்பாளிகளுக்கும், ஒரு கலைஞனின் முயற்சிப்பாதை நேர்த்தியாக இருக்கிறதா என்ற அக்கறை இருக்கத்தான் செய்யும். உதவி, உருதுணை, ஊக்கிவிப்பு, இவை ஒரு படைப்பாளிக்கு, சக படைப்பாளி மீதுள்ள, கலைஞன் மீதுள்ள, கலைமீதுள்ள, சமூகம் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமைகிறது.

ஒரு படைப்பாளியின் பாராட்டாக இருக்கட்டும், விமர்சனமாக இருக்கட்டும், படைப்புகளின் தரம், கலைஞனின் பாதை இவற்றை சார்ந்தே அமைகிறது. சிலவேளைகளில் படைப்பாளிகளின் சினத்திற்குக்கூட இவையே காரணம் என்று கூட சொல்லலாம். இவற்றைத்தாண்டி ரசிகர்களிடம் ஒரு படைப்பு சென்றடையும்போது பல்வேறு வேறுபட்ட விமர்சனங்களை பெறுகிறது, அது ஒவ்வொரு ரசிகர்களின் ரசனைத்தன்மையையும், வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும், சொந்த விருப்பு வெறுப்புகளையும், அனுபவங்களையும் கொண்டே வெளிப்படுகிறது. ஒரு கலைஞனின் விமர்சனத்திற்கும், ரசிகர்களின் விமர்சனத்திற்கும் பெரும் வேறுபாடு இருக்கலாம், இருப்பினும் ஒரு கலைஞனின் விமர்சனம் தரத்தையும், மேம்படுதலையும் நோக்கிய ஒரு விமர்சனமாக இருப்பின் அந்த படைப்பாளியின் நேர்த்தியான விமர்சனம் அக்கறையின் பிரதிபலிப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. மேலுள்ள வாக்கியங்கள் அனைத்தும் ஒரு ரசிகனாகவும், கலைஞனாகவும், படைப்பாளியாகவும் என்னை நானே தராசிலிட்டு கணிக்கப்பட்டவையே. ஒரு படைப்பிற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியபோது, கூடவே, விமர்சனம் எழுத நான் யார்?, எனக்கென்ன தகுதி இருக்கிறது?, எனக்கென்ன தேவை இருக்கிறது? எனக்கென்ன பொறுப்பிருக்கிறது? என்ற எனது கேள்விகளுக்கு, என் மனதில் தோன்றிய விடைகளே இவை. இதில் சரி பிழை என்பது அவரவர் கருத்து, எதுவாக இருப்பினும் அவற்றையும் பணிவோடு மதிக்கிறேன். வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணிப்போம்! நம்மை வளர்த்துக்கொள்வோம்! உடன் பயணிப்பவர்களுக்கு கைகொடுப்போம்! உதவுவோம்! உற்சாகம் செய்வோம்! உறுதுணையாய் இருப்போம்!

தாயை போற்றுவோம்! தாய் மண்ணை பேணுவோம்! தாய்மொழியில் பேசுவோம்!

– ஈழன் இளங்கோ –