போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

உடல்நலக்குறைவால் அவதியுற்று வரும் போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் கடந்த வாரம் மக்களுடன் பிரார்த்தனையில் ஈடுபடும் நிகழ்ச்சியில் போப்  பிரான்சிஸ் (வயது 83) பங்கேற்றார். அப்போது அவர் கடுமையான இருமல், ஜலதோ‌‌ஷத்தால் அவதியுற்றார்.
இதையடுத்து, மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை போப் பிரான்சிஸ் ரத்து செய்தார். மேலும், அவர் லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ்
இதனால் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் எழுந்தது. உடனடியாக போப் பிரான்சிசுக்கு கொரோனா குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் போப் பிரான்சிசுக்கு கொரோனா பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வந்துள்ளது சாதாரண ஜலதோஷம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.