ஆஸ்திரேலியாவுக்கும் பரவிய கொரோனா வைரஸ்: 78 வயது முதியவர் பலி!

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 78 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்பால் ஆஸ்திரேலியா நாட்டில் முதன்முதலாக இன்று 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மாதம் ஜப்பானில் இருந்து ‘டைமன்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பலில் வந்த சுமார் 160 ஆஸ்திரேலியா நாட்டினர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலியா நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் உடனடியாக பெர்த் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி முதல் அங்கு தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவரான 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியான முதல் ஆஸ்திரேலியா நாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த நபரின் மனைவியான சுமார் 79 வயது மூதாட்டியும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான தலைமை மருத்துவ அதிகாரி ராபர்ட் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் நாட்டில் இருந்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபருடன் சேர்த்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.