கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் முதல் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்துலுக்கு ஆளாக்கி வரும் கரோனா வைரஸ் அமெரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் விட்டு வைக்கவில்லை. இரு நாடுகளிலும் கரோனா வைரஸுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, ஈரான், இத்தாலி, மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார். கரோனா வைரஸ் பலருக்கும் பரவியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலையை பிறப்பித்துள்ளனர்.

சீனாவின் ஹுபே மாகாணத்தில், வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2900 பேர் உயிரிழந்துள்ளனர், 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவந்தன. அதில் அமெரிக்க பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயணிகளுக்கு விதித்தது.

இந்த சூழலில் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து வாஷிங்டனின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் ” கரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு வாஷிங்டன் மாகாணத்தில் நடந்துள்ளது. சீட்டல் நகரின் புறநகரான கிரிக்லாந்துபகுதியில் இந்த உயிரிழப்பு நடந்திருந்தாலும் உயிரிழந்தவரின் அடையாளம், பெயர் ஆகியவற்றை வெளியிட முடியாது. மேலும், கிங் கவுண்டி பகுதியில் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியாது. இதானால் வாஷிங்டனில் மாகாணத்தில் அவசரநிலையை கவர்னர் பிறப்பித்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மக்களுக்கு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ” அமெரிக்க மக்கள் யாரும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். தற்போது அமெரிக்காவில் 60 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சீனாவில் இருந்து மீட்கப்பட்டவர்கள்.” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸுக்கு முதல் உயிரிழப்பு நடந்துள்ளது. பெர்த் நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளார். ஜப்பான் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவரான இந்த முதியவருக்கு நோய் தொற்று இருந்தது.

ஜப்பான் கப்பலில் இருந்து முதியவரும், அவரின் மனைவியும் மீட்கப்பட்டு பெர்த் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் அந்த முதியவர் சிகிச்சை பலனிக்களாமல் உயிரிழந்தார், அந்த முதியவரின் மனைவி உடல் நிலை சீராக இருக்கிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே ஈரான் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இவர் மேற்கு சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்