‘கொரோனா’ வைரஸ் 60 நாடுகளுக்கு பரவியது!

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

31 மாகாணங்களில் பரவிய கொரோனா வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில் அதிகபட்சமாக கடந்த மாதம் ஒரே நாளில் 252 பேர் பலியானதால் சீனாவில் பெரும் பீதி நிலவியது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்தது.

சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரசின் வீரியம் குறைந்தது. இதனால் உயிரிழப்பவர்கள், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

நேற்று சீனாவில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 47 பேர் உயரிழந்தனர். இதில் 45 பேர் ஹூபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 835 ஆக உயர்ந்தது. நேற்று புதிதாக 427 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனா வைரசுக்கு 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 39 ஆயிரம் பேர் குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வரும் காட்சி

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு 37 நாடுகளுக்கு பரவி இருந்தது. இப்போது மேலும் 23 நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது.

இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

தென்கொரியா, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ், மக்காவ், வியட்நாம், மலேசியா, ஈரான்,  ஈராக், ஓமன், குவைத், பக்ரைன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மணி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, குரேசியா, கிரீஸ், ஆஸ்திரியா, ரஷியா, ஸ்வீடன், பெல்ஜியம், நெதர்லாந்து, ருமேனியா, நார்வே, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜார்ஜியா, எகிப்து, இந்தியா, நேபாளம், இலங்கை, கம்போடியா, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், லெபனான் உள்பட 60 நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீனாவில் இருந்து ஆசிய நாடுகளுக்கு பரவிய கொரோனா ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. அதன்பின் மேற்காசிய நாடுகள், தென் அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களுக்கும் பரவி உள்ளது. தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய 3 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவில் நேற்று 594 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவ தொடங்கிய பிறகு நேற்று தான் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தென்கொரியாவில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடாக ஈரான் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34 பேர் பலியாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அரசியல் தலைவர்களும் தப்பவில்லை. சுகாதாரத்துறை துணை மந்திரி, துணை அதிபர் ஒருவர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஈரானில் மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. ஈரானில் கொரோனாவுக்கு 210 பேர் பலியாகி உள்ளதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 820 பேர் பாதிப்படைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தில் 20 பேரும், ஆஸ்திரேலியாவில் 2 பேரும், ஐஸ்லாந்தில் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்துக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

அங்குள்ள சப்-சகாரா ஆப்பிரிக்கா பகுதியில் இத்தாலியின் மிலன் நகரைச்சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டு நைஜீரியாவுக்கு திரும்பி இருந்தார். திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க கண்டங்களில் சுகாதாரம் கவலை அளிக்கும் நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் உலக சுகாதார அமைப்பு கடும் கவலையை தெரிவித்து இருக்கிறது.

ஆப்பிரிக்க கண்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

அதேபோல் புதிதாக 6 நாடுகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மெக்சிகோ, பெலாரஸ், லூதினா, நியூசிலாந்து, அசர்பைஜான், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கு பரவி உள்ளதால் மக்களிடம் பெரும் பீதி நிலவுகிறது. பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்தே செல்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 85 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்டராஸ் கூறியதாவது:-

‘உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். நமது எதிரி வைரஸ் அல்ல. வதந்தி பரப்புவது, பயம் ஆகியவைதான். கொரோனா வைரஸ் சுலபமாக பரவுவதாக எந்த ஆதாரங்களையும் நாங்கள் இதுவரை பார்க்கவில்லை’ என்றார்.