ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மலேசியர்கள்!

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணியாற்ற முயன்ற 5 மலேசியர்களை பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய எல்லைப்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

5 பேர் கொண்ட இக்கூட்டத்தை வழிநடத்தியதாக ஒப்புக்கொண்ட 34வயதுடைய மலேசியருக்கும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் திகதி இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாக்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகின்றது. முதலில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரித்த பொழுது, 5 மலேசியர்களையும் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனக் கூறியுள்ளார் இந்நபர். பிறகு நபர் ஒருவருக்கு 500 மலேசிய ரிங்கட்களை(180 ஆஸ்திரேலிய டாலர்கள்) பெற்றுக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவர்களை ஆஸ்திரேலிய பண்ணைகளில் வேலைச் செய்ய வைக்கயிருந்ததாகக் கூறப்படுகின்றது. அதே சமயம், இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இச்சம்பவம் மனித கடத்தலா என்பதற்கான எவ்வித ஆதாரமும் கண்டறியப்படவில்லை.

மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 5 பேர்களில் 2 பெண்கள், 2 ஆண்கள், மற்றும் 17 வயதுடைய ஆண் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இவர்கள் அனைவரும் மலேசியாவுக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றனர்.