காணாமல்போனோர் அலுவலகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஜெனிவா பேரவையில், இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பேரவையில் தினேஷ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “30/1 மற்றும் 40/1 போன்ற பிரேரணைகளுக்கான அனுசரணையிலிருந்து அரசாங்கம் விலகினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
அபிவிருத்தி நிரந்தர சமாதானம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் நாங்கள் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்துள்ளார். அனுசரணையிலிருந்து விலகினாலும் உள்ளக ரீதியில் இந்த பிரச்சினைகளை ஆராய தயாராக இருக்கின்றோம். கால அட்டவணையுடன் செயற்படுவோம்.
கடந்த நான்கரை வருடங்களாக 30/1 பிரேரணை இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்களே கடந்துள்ளன. மனித உரிமை பேரவை எமது மக்கள் வழங்கியுள்ள ஆணையை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இராணுவ தளபதி சவந்திர சில்வா மீது சில நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ள இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். நாம் தொடர்ந்து அவருக்காக முன்நிற்போம். சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தப்படும்.
13 ஆவது திருத்தத்துக்கு அமைய வடக்கு மக்களுக்கு வாக்குரிமையை 25 வருடங்களுக்கு பின்னர் நாங்களே வழங்கினோம். விரைவில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெறும். காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இழப்பீடும் வழங்கப்படும். உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.