கான்பெர்ராவில் நடைபெற்ற ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை 103 ரன்னில் கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது.
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வங்காளதேச வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அலிசா ஹீலி 53 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பெத் மூனே ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 81 ரன்களும், கார்ட்னர் 9 பந்தில் 22 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் வீராங்கனைகள் ரன் குவிக்க திணறினர். அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Eelamurasu Australia Online News Portal