ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதியின் நாவல் திரைப்படமாக…..!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானியின் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ எனும் நாவல் விரைவில் திரைப்படமாக உருவெடுக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை Sweetshop & Green, Aurora Films மற்றும் Hoodlum Entertainment எனும் தயாரிப்பு நிறுவனங்கள் தனது கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெஹ்ரூஸ் பூச்சானி. இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நாவலாக அவர் எழுதியிருந்தார்.

இந்நாவல் இலக்கிய பரிசுகளை வென்றிருந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்க சென்ற அவர் மீண்டும் அத்தீவுக்கு திரும்பவே இல்லை.