கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள லா ட்ரோப் பல்கலைகழகம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெயரில் பிஎச்டி படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் ஒன்றை அறிவித்திருந்தது. தற்போது அந்த ஸ்காலர்ஷிப் கேரளாவைச் சேர்ந்த பிஎச்டி மாணவியான கோபிகாவுக்கு கிடைத்துள்ளது. முதல் ஷாருக்கான் லா ட்ரோப் பல்கலைகழக பிஎச்டி ஸ்காலர்ஷிப்பை மாணவி கோபிகாவுக்கு நேற்று (26.02.2020) ஷாருக்கான் வழங்கினார்.
மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாருக்கான் பேசியதாவது:
நான் கல்வி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். ஒரு நகரமோ, மாநிலமோ, நாடோ மேலும் மேலும் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். கல்விக்கு முடிவே கிடையாது.
நமது வாழ்க்கையின் எஞ்சியுள்ள நாட்களை கல்வி கற்பதில் செலவழிப்பது மிக முக்கியமாகும். நம் இந்திய கல்வி முறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
எந்த நாடாக இருந்தாலும் கல்வி மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி. பெண்கள் தங்களை கவனித்துக் கொள்வதற்கும், தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கும் கல்வியும், முன்னேற்றமும் மிக அவசியம். பெண்கள் கல்வியில் முன்னேறினால் உலகம் முன்னேறும்.
கோபிகாவின் விடாமுயற்சியையும், அர்ப்பணிப்பையும் நான் நம்புகிறேன். இந்த ஸ்காலர்ஷிப் அவர் ஆஸ்திரேலியா செல்வதற்கும் இந்திய விவசாயத் துறையின் முன்னேற்றம் குறித்த அவரது கனவை பின் தொடரவும் உதவும்.
இவ்வாறு ஷாருக்கான் பேசினார்.