இந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இனி திரைப்படம் தயாரிக்கும் போது கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கமல் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.