சீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நியூஸிலாந்து தனது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் எட்டு நாட்களுக்கு நீடித்து வைத்துள்ளது.

அதன்படி கடந்த 14 நாட்களில் சீனாவின் பிரதான நிலப்பகுதிகளுக்கு சென்ற அனைத்து வெளிநாட்டினக்கும் நாட்டுக்குள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் சீனாவுக்கு பயணித்த நியூஸிலாந்துக் பிரஜைகளுக்கு நாட்டுக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நாட்டுக்கு வரும் அவர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திய பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்க சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து வருவோருக்கு தற்காலிக பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இது இன்னும் எட்டு நாட்களுக்கு அமுலில் இருக்கும்.

அதன்படி மார்ச் 03 ஆம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். எனினும் இந்த பயணக் கட்டுப்பாடுகள் ஹொங்கொங், மாக்கோ மற்றும் தாய்லாந்துக்கு விதிக்கப்படவில்லை என்றார்.

நியூஸிலாந்தில் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.