முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணியை விட இரண்டாவது இன்னிங்சில் வெறும் 8 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் சவுதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 1.4 ஓவரிலேயா வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தில் வரும் 29-ம் திகதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.