மன்னாரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் குறித்த போராட்டமானது மன்னார் நகர மண்டபத்தின முன் ஆரம்பமாகி மன்னார் சதொச மனித புதைகுழிக்கு அருகில் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும்.
இந்த போராட்டத்தின்போது சதொச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் நீதியான விசாரணை நடத்தக் கோரியும் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும் அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டை வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் வர்த்தக சங்கங்களும் ஒத்துழைப்பு தரும்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளாகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்’ எனஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal