இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 31/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டுக்குப் பாதகமாக அமையக் கூடிய மேலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து கவலைப்படுவதாகக் கூறியிருக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை , தேசிய நல்லிணக்கத்தின் மீது தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டிருப்பதை வெளிக்காட்டக் கூடியதாக மாற்று பயணத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பெருமளவு மனித உரிமை மீறல்களுக்காக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அமெரிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்ததையடுத்து இலங்கை அரசாங்கம் தற்போது பெரியதொரு சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது ஆட்கள் காணாமல் போன விவகாரம் , மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் உட்பட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை கையாளுவதற்கு இலங்கை விருப்பமில்லாதிருக்கிறது என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக விதிக்கப்படுகின்ற சர்வதேச தடைகளின் ஒரு தொடர்ச்சியே இராணுவத்தளபதி மீதான அமெரிக்கப் பயணத்தடை ஆகும்.
பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான கட்டளைப் பொறுப்பைக் கொண்டிருப்பவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பிறகு ஐக்கிய நாடுகள் சபை அதன் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தைப் பயன்படுத்துவதைக் கடந்த வருடம் இடைநிறுத்தியிருந்தது.
2014 ஆம் ஆண்டளவில் ஐ.நா.வினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் வேறு அறிக்கைகளிலும் காணப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்காவின் தீர்மானம் அமைந்திருப்பதாக வாதிக்கப்படுகிறது. நல்லிணக்கத்துக்கான ஒரு பயணத் திட்டத்தை வகுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் 2015 ஒக்டோபரில் இலங்கை அரசாங்கம் மேற்கூறப்பட்ட அக்கறைகள் தொடர்பில் கவனித்து அக்கறை எடுப்பதற்கு இணங்கிக் கொண்டது.
மறுபுறத்தில் ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையில் இருந்து 2018 இல் அமெரிக்கா விலகிய செயல் இலங்கை அளித்த உறுதிமொழிகளுக்கு சோர்வைத் தந்தது. 2015 – 2019 கால கட்டத்தில் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உகந்த நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது என்பதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிய பின்னர் மாத்திரமே தடைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரசாங்கத்தின் தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கும் நிலையில் நாட்டுக்கு பெரும் பாதகமாக அமையக் கூடிய மேலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து இலங்கை தேசிய சமாதனப் பேரவை கவலை கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தில் சகல தரப்புக்களினாலும் மனித உரிமை மீறல்களும் குற்றங்களும் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அரசு ஏற்றுக் கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உச்ச மட்டத்துக்கு மீள்விப்பதில் முன்னுரிமைக் கவனம் செலுத்துவதே தற்போதைய தருணத்தில் அரசாங்கம் முன்னெடுக்கக் கூடிய உகந்த பாதை என்பது தேசிய சமாதானப் பேரவையின் நம்பிக்கை.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளினால் வழிகாட்டப்படுகின்றவாறு நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு உள்நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு பொறுத்தமானவாறு புத்தாக்கமானதும் நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளைக் காண்பதற்கு இலங்கை உறுதி கொண்டிருக்கிறது என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஷேனுகா செனவிரத்ன அண்மையில் கூறியிருந்தார்.
ஜனநாயக வழிமுறைகள் ஊடாக பிரஜைகளினால் வெளிப்படுத்தப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடு;கள் மனித உரிமை பேரவையின் 31/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தைத் தொடர்ந்து சகல இலங்கையர்களினதும் அக்கறைகளை கவனத்தில் எடுக்கக் கூடிய பயணத்திட்டம் ஒன்றை வெளிப்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தில் தொடர்ந்தும் தனக்கிருக்கும் பற்றுறுதியை அரசாங்கம் வழிகாட்ட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அழைப்பு விடுக்கிறது