‘மினிமெட் 670ஜி’ -சர்க்கரை நோயாளிக்கு உற்ற தோழன்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்காணிப்பது ஒரு பெரிய வேலை. அவர்களது விரலில் ஊசியைக் குத்தி, ரத்தத்தை எடுத்து, சர்க்கரை அளவை பார்க்கும் வலியும், சலிப்பும் மிக்க முறைதான், இப்போது பரவலாக இருக்கிறது. இந்த முறைக்கு பல மாற்று முறைகள் வந்தாலும், அவை பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சமீபத்தில், ‘செயற்கை கணையம்’ போல செயல்படும் ஒரு கருவிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

‘மெட்ரானிக்’ நிறுவனம் தயாரித்துள்ள, ‘மினிமெட் 670ஜி’ என்ற இந்த சிறிய கருவியை, சர்க்கரை நோயாளி, உடலுக்கு வெளியே அணிந்துகொண்டால், அதுவாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரு உணர்வான் மூலம் அளவிடுகிறது. அளவு நார்மலுக்கு மாறாக இருக்கும்போது, அதிக வலியில்லாத நுண் ஊசி மூலம் உடலில் இன்சுலினை, ‘பம்ப்’ செய்து சர்க்கரை அளவை சமன் செய்கிறது.

இந்த சாதனம் ஆய்வக சோதனைகளை தாண்டி, சந்தைக்கு வர சில ஆண்டுகளாவது ஆகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அரசு, விரைவிலேயே அனுமதி அளித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

சோதனைகளின்போது, 14 வயதுக்கு மேற்பட்ட, 123 சர்க்கரை நோயாளிகளுக்கு மினிமெட் சாதனத்தைத் தந்து, மூன்று மாதங்கள் அணிந்திருக்கச் செய்தது மெட்ரானிக். பிறகு அந்த சாதனம் அணியாமல் சில வாரங்கள் இருக்கச் செய்தது.

இதனால், ஒப்பீட்டளவில் மினிமெட் சாதனத்தை அணிந்தபோது நோயாளிகளின் சர்க்கரை அளவை துல்லியமாக கட்டுப்படுத்த முடிந்தது தெரியவந்ததும், அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்து, 14 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கான கருவி ஒன்றை மெட்ரானிக் சோதித்து வருகிறது.