அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, சர்வதேச சட்டதின் அடிப்படையில் சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்.
ஆஸ்திரேலியாவின் சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ வில்கிக்கு வழக்கறிஞர் அலுவலகம் எழுதிய கடிதத்தில், பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் உள்ள முகாம்களில் உடல் மற்றும் பாலியல் வன்முறை அவ்வப்போது நிகழக்கூடிய ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவ்விஷயங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும் வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்கான ‘சூழ்நிலைக் கூறுகள்’ நிரூபிக்கவில்லை என்றும் வழக்கறிஞர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளை தடுத்தும் வைக்கும் முறை, நாடுகடத்தல் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுவதாக முதன்முதலில் 2014ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் வில்கி. ஆஸ்திரேலியாவின் தஞ்சம் கோரிக்கையாளர்கள் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை மேலதிக விசாரணைக்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறார் வில்கி.
சர்வதேச சமூகத்திற்கு கவலையளிக்கக்கூடிய ’இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்’ போன்றவற்றை விசாரிக்கும் வகையில், 2002ல் சர்வதேச குற்றியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.