தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
ரிஷி ரித்விக், ஆஷா ஜோடியாக நடித்துள்ள படம் மரிஜுவானா. எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். தேர்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர்கள் பாக்யராஜ், மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே.ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, “கோடி கோடியாக சம்பளம் பெறும் நடிகைகளின் உதவியாளர்களுக்கு படி கொடுப்பதால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
மரிஜுவானா படத்தின் கதாநாயகன் ரிஷி ரித்விக்கை பார்க்கும்போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்துள்ளார் என்று தோன்றுகிறது. இந்த படத்தில் சமுதாயத்துக்கு நல்ல கருத்தை கூறியுள்ளனர். இந்த படத்தை பார்த்து போதை பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் திருந்த வேண்டும்” என்றார்.
மேலும் கே.ராஜன் கூறும்போது, “கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தயாரிப்பாளர் ‘பேட்டா’ கொடுக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது.
நடிகைகள் தமன்னா, சமந்தா உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இதே மாதிரி படி கொடுக்க வேண்டி உள்ளது. இந்த செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.