மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 காய்ச்சல் கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களில் ஹுபெய் மாகாணம் மட்டுமன்றி சீனா முழுவதும் இந்தக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2004 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் தகவலின்படி சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனை திரும்பியுள்ளனர்.
சாங்கின் தாய் மற்றும் தந்தை இருவரும் கரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சில நாட்களிலலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரையும் பராமரித்து வந்த சாங் கை மற்றும் அவரது சகோதரி இருவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். பெற்றோர் இறந்த சில மணி நேரங்களிலேயே சாங்கின் சகோதரியும் உயிரிழந்தார்.
கடைசியாக சாங் எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ‘கடந்த ஜனவரி 25 ஆம் தேதி எனது தந்தை நோய்வாய்ப்பட்டார். அவருக்குக் காய்ச்சலும், இருமலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றோம். ஆனால், நாங்கள் சென்ற அந்த மருத்துவமனை அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களிடம் போதுமான படுக்கைகள் இல்லை” என்று சாங் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சாங் தனது தந்தையை மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்தார். இதனால் அவர் மூலம் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. முதலில் தந்தை, தாய், தங்கை மரணமடைந்த பிறகு கடந்த 14-ம் தேதி அன்று சாங் உயிரிழந்தார். சாங்கின் மனைவி கரோனா தாக்குதலுக்கு ஆளாகி தற்போது தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.