கொரோனா வைரஸ் – சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சீன அதிபருக்கு எதிர்ப்புகள் வலுத்தவண்ணம் உள்ளது.

சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதமே இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தினமும் உயிர்ப்பலி அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் சீன அதிபர் தலைமறைவாகி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியானது.

அதன்பிறகு சீன அதிபர் ஜி ஜின் பிங், வுகான் நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா பாதிப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் ஜி ஜின் பிங் கேட்டறிந்தார். வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடும் சூழலில் பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாட்டை எப்போதும் போல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

அத்துடன் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் பீதியை தவிர்க்க வேண்டும். வைரஸ் பாதிப்பு குறித்து இணையதளத்தில் வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்தார்.

பிப்ரவரி 3-ந் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அன்றைய தினம் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழுவுடனும் அவர் பேசி உள்ளார்.

அப்போது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பொருளாதாரத்தை அதிகரிக்க தேவையான கொள்கைகளை வகுக்குமாறு அதிகாரிகளிடம் கூறுப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கி உள்ளார்.

ஜனவரி மாதமே வைரஸ் தாக்கம் தீவிரமாகிய நிலையில் 7-ந் தேதி அதிபர் ஜி ஜிங் பிங், அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன் பிறகும் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, வைரசை கண்டுபிடித்த டாக்டர் லீ வென்லியாங்சை அதிகாரிகள் மிரட்டியதும், அவரது மரணமும் அந்நாட்டு அரசுமீது மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களால் அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிர்ப்புகள் வலுத்தவண்ணம் உள்ளது.