பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாண நகரத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி செய்துகொள்ளவிருக்கிறது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சி, சுகாதரம், கல்வி மற்றும் தொழில் துறைகளில் அறிவுப்பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை இரு நகரங்களுக்கும் மேம்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இதுதொடர்பில் வட மாகாண சபை முதலமைச்சர் எடுத்துவந்த முயற்சி தற்போது கைகூடி உள்ளது.
இதுதொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கிங்ஸ்ரன் கவுன்சிலின் அரங்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் இந்த நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதன்மை உரையை நிகழ்த்தவுள்ளார். இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் கிங்ஸ்ரன் கவுன்சில் செய்துள்ளது.
முதலமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது கிங்ஸ்ரன் கவுன்சிலின் அனுசரணையுடன் கிங்ஸ்ரன் வைத்தியசாலை, கிங்ஸ்ரன் பல்கலைக்கழகம் மற்றும் கிங்ஸ்ரனில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் ஸ்தாபனங்களுக்கும் விஜயம் செய்து இந்த உடன்படிக்கையின் கீழ் எத்தகைய பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆராய்வார்.
இதேபோன்ற உடன்படிக்கையினை யேர்மனியின் ஆல்டென்பெர்க் மற்றும் தென் கொரியாவின் குவானக்-கு ஆகிய மா நகரங்களுடனும் கிங்ஸ்ரன் மாநகரம் செய்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் கீழ் பல எண்ணக்கருக்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலம் பல பொதுவான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள கிங்ஸ்ரன் கவுன்சிலர் கெவின் டேவிஸ் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வரவேற்பதில் தாங்கள் மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் இந்த வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க நிகழ்வில் உரையாற்றுவதை கேட்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் நுழைவு சீட்டுக்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்ட ஆசனங்கள் உள்ளதால் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு முன்னர் என்ற இணைய முகவரி ஊடாக அவற்றை பெற்றுக்கொள்ளும்படியும் கிங்ஸ்ரன் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
கிங்ஸ்ரன் மாநகரத்தில் சுமார் 12,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். கிங்ஸ்ரனில் தமிழ் இரண்டாவது மொழியாக காணப்படுகிறது.
இதேவேளை, லண்டன் விஜயம் செய்யும் முதலமைச்சரை வரவேற்பதற்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.