புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (17) நிறைவடைகின்றது.
அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எனவே, சரியான விண்ணப்பங்களை இன்றைய தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்க முடியும் என ஆணைக்குழு கேட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானது.
அதற்கமைய கிடைத்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் செயற்பாடு பிற்போடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.