ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா அரசின் ஸ்பான்சர் முறையின் கீழ் அவர்களுக்கு அங்கு நிரந்தரமாக வசிக்க (Permanent Residency) இடமளிக்கப்பட்டுள்ளது.
திமா அவரது கணவர் ஹனி மற்றும் அவர்களது குழந்தைக்கே இந்த புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
திமா எனும் பெண் குவைத்தில் பிறந்த நாடற்ற பாலஸ்தீனிய அகதி. அவரைப் போலவே நாடற்ற பாலஸ்தீனிய அகதியான ஹனியை ஈராக்கில் சந்தித்து அங்கிருந்து இருவரும் ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளனர். ஆஸ்திரேலியா நோக்கிய பயணம், அவர்களை நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தள்ளியிருக்கின்றது. கர்ப்பமான நிலையில் தஞ்சமடைந்திருந்த திமாவின் உடல்நிலையை ஆஸ்திரேலிய அரசு இறுதியாக கருத்தில் கொண்டாலும் ஆஸ்திரேலியாவுக்கு இடமாற்ற நவுரு அரசு அனுமதி மறுத்தது.
றுதியாக, ஆஸ்திரேலியாவின் Cairns நகருக்கு கொண்டு செல்லப்பட்ட திமா கணவரான ஹனி இல்லாமல், தனியாக தனது குழந்தையை பெற்றெடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது குடும்பம் ஆஸ்திரேலியாவில் ஒன்றிணைந்திருந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த நல்லதொரு வாழ்க்கை உருவாகவில்லை. இந்த சூழலிலேயே, கனடா அரசின் ஸ்பான்சர் திட்டம் மூலம் கனடாவில் குடியேறும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
சிட்னியிலிருந்து தங்களது கைக்குழந்தையான முகமதுடன் கனடா சென்றடைந்துள்ள திமா மற்றும் ஹனியின் பயணம் கனடாவில் ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) இல்லையெனில் சாத்தியமாகி இருக்காது.
ரவி டி கோஸ்டா, அவரது தில்யா, தில்லியாவின் சகோதரி, மற்றும் இரு நண்பர்களின் ஆதரவுடன் பாலஸ்தீன அகதிகளின் கனடா நோக்கிய பயணம் முழுமையடைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் Cairns நகருக்கு கர்ப்பமான நிலையில் திமா மாற்றப்பட்ட போது கரோலின் டி கோஸ்டா எனும் மகப்பேறு மருத்துவரை சந்தித்திருக்கிறார். கரோலின் மகனே ரவி டி கோஸ்டா. ஆஸ்திரேலியரான இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
அகதியான திமா, மருத்துவரான கரோலினை தனது ஆஸ்திரேலிய தாய் என்றே குறிப்பிடும் அளவிற்கு அவர்களிக்கு இடையில் நல்ல பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறான சூழலில், 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து கனடா அரசின் ஸ்பான்சர் திட்டத்தின் மூலம் கனடா சென்றடைந்த அமிரை பற்றி கேள்விப்பட்ட கரோலினும் ரவியும் பாலஸ்தீன அகதியான திமாவின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளனர். திமாவின் கணவர் ஹனி நவுரு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே ஸ்பான்சர் திட்டம் மூலம் இவர்களை கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் வேலையை ரவி தொடங்கியிருக்கிறார்.
இந்த ஸ்பான்சர் திட்டத்தின் மூலம் ஓர் அகதியை ஆதரிக்க ஆயிரக்கணக்கான டாலர்கள் தேவைப்படுகிறது. சுமார் ஓராண்டுக்கு மேல் கடந்த நிலையில், வெற்றிக்கரமாக பாலஸ்தீன அகதி குடும்பத்தை கனடாவுக்கு அழைத்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர் கரோலின் உதவியுடன் சுமார் 26 ஆயிரம் டாலர்கள் பணத்தை அக்குடும்பத்திற்கான நிதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தன்னைத் தெரியாவிடிலும் தனக்கு பிறர் உதவியது போல, ஆஸ்திரேலிய தடுப்பு காவலில் உள்ள அகதிகளுக்கு தான் உதவ எண்ணுவதாகக் கூறுகிறார் திமா.
“இது அரசின் செயல் அல்ல, மக்களின் செயல் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. ஏனெனில், அரசாங்கம் மக்கள் சொல்வதற்கு செவிசாய்ப்பதில்லை,” எனத் தெரிவித்திருக்கிறார் பாலஸ்தீன அகதியாக கனடாவில் குடியேறியுள்ள திமா.