கடந்த உலக கோப்பையில் எங்களை தோற்கடித்த ஆஸ்திரேலியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா முகமது தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா போட்டியை நடத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் வருகிற 21-ந்திகதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அந்த அணியின் பார்ட்டியை சிதறடிப்போம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சு வீராங்கனை அனிசா முகமது தெரிவித்துள்ளார்.
டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அனிசா ‘‘நாங்கள் இங்கு உலக கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் இருந்து அதனுடன்தான் செல்வோம். இது ஆஸ்திரேலியாவின் பார்ட்டியை சிதறடிக்க சிறப்பானதாக இருக்கும். அவர்கள் எங்கள் பார்ட்டியை 2018-ல் சிதறடித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க இது சரியானதாக இருக்கும்.
ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த முத்தரப்பு தொடரில் கோப்பையை கைப்பற்றினர். இருந்தாலும் நாங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.