அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் உதிரி பாகங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்வான் நாட்டு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஐபோன் மாடலுக்கான உதிரிபாகங்களை விநியோகம் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கு தேவையான பாகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான தயாரிப்பு பணிகள் அடுத்த சில வாரங்களில் துவங்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த ஐபோனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின் செமி, சின்டெக் போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய ஸ்டிரக்ச்சர்டு லைட் 3டி சென்சார்கள், VCSEL பாகங்கள் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. விலை குறைந்த ஐபோன் எஸ்.இ. 2 மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் நடைபெறும் பணிகளை கவனிக்க பொறியாளர்களை அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு அனுப்புவதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 138.5×67.4×7.8 எம்.எம். அளவில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் எஸ்.இ. 2 பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
ஐபோன் எஸ்.இ.2 மாடலில் ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோனில் டச் ஐ.டி. அம்சம் வழங்கப்படலாம்.
புதிய விலை குறைந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 பயோனிக் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஐபோன் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.