இலங்கையில் வாழும் மக்கள் மாத்திரமல்ல உலகத்தில் வாழும் மக்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது நில உரிமை மற்றும் வீட்டுப் பிரச்சினை.
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தையடுத்த பல மக்கள் அவர்களது சொந்த நிலங்கள் மற்றும்அவர்களின் வீடுகளை பறிகொடுத்து நடுத்தெருவில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 வருட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்த அகதிகள் இன்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் ஒரு பகுதி முஸ்லிம் அகதிகள் கொழும்பு 15 மட்டக்குளி காக்கைதீவு பிரதேசத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். சுமார் முப்பது வருடங்களாக நிரந்தர வீடுகளோ நிலங்களோ இன்றி இன்றும் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
அங்கு கடந்த 1990 ஆம் ஆண்டு தமது இடங்களில் இருந்த விரட்டப்பட்ட 110 குடும்பங்களுக்கு மேலானவர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த மக்கள் நீர் வசதி, மின்சார வசதி, வாக்குரிமை என்பவற்றை கொழும்பிலே பெற்றுக்கொண்ட போதிலும் இன்று வரை இவர்களுக்கு நிரந்தரமான வீடுகளோ, நிலங்களோ இல்லை.
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வெறுமனே வாக்குகளை பெறுவதற்காக இங்கே வந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு செல்வதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்ற இவர்களின் ஒரே எதிர்பார்ப்பு சொந்தமான ஒரு வீடோ அல்லது தற்போது வசிக்கின்ற இடத்திற்கு ஒப்புதலே ஆகும்.
ஏனெனில் இவர்களுக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டால் தாம் தற்போது வசிக்கின்ற வீடுகளை ஒழுங்கான முறையில் நிர்மாணித்துக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும் சுகாதார சிக்கல்கள் மாத்திரமன்றி கலாச்சார ரீதியிலும் தற்போது பிரச்சினைகள் எழுந்து உள்ளதாகவே அந்தமக்கள் குறிப்பிடுகின்றார்கள்
குழந்தைகள், பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் கூட்டாக வசித்து வரும் தமக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்கப் போன்றதோ என்ற அங்கலாய்ப்பில் அந்தமக்கள் வாழுகின்றனர்.
இந்நிலையில் நாம் மட்டக்குளி காக்கைதீவு பகுதிக்கு சென்று அந்த மக்களின் அங்கலாய்ப்பு தொடர்பில் கேட்டறிந்துகொண்டோம்.
முச்சக்கரவண்டி சாரதியாக தொழில்புரியும் ஹனீபா தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிலுள்ள மட்டக்குளி பகுதியில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றோம்.
நாங்கள் இங்கு எமக்குத் தேவையான அனைத்தையும் அமைத்துக்கொண்டோம். குறிப்பாக தண்ணீர் வசதி, வாக்காளர் பட்டியல் மற்றும் மின்சார வசதி ஆகியவற்றை நாம் பெற்றுக்கொண்டோம்.
எமது வாக்குரிமையனைத்தும் இங்கு தான் உள்ளது. நாங்கள் இங்கு வந்து 12 வருடங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டது. அது பின்னர் நிறுத்தப்பட்டது. என மிகவும் கவலையுடன் தெரிவித்தார்.
கணவனை இழந்த குடும்பப்பெண்ணான பேகம் பேரா குறிப்பிடுகையில்,
பேகம் பேரா – கணவனை இழந்த குடும்பப்பெண்
இங்கு சரியான கஷ்டம் தான். எனக்கு கணவனும் இல்லை இந்த சிறிய வீட்டுக்குள்ளேயே 3 குடும்பங்கள் வாழும் நிலைமையில் உள்ளோம்.
மழைகாலங்களில் வெள்ளம். வெள்ளத்திற்குள்ளேயே எமது வாழ்க்கை கடக்கின்றது. எங்களுக்கு வேறு ஒன்றும் தேவையில்லை. எமக்கு ஒரு பாதுகாப்பான வீடு மாத்திரமே தேவை.
சுமார் 30 வருடகாலமாக நாங்கள் வீடு இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றோம். அது பெரும் கஷ்டமாகவே எமக்கு உள்ளது. எமக்கு குடி தண்ணீர் வசதியும் இல்லை. தயவு செய்து எமக்கு யாராவது வீடுகள் பெற்றுத் தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.
எனது 3 பிள்ளைகளும் திருமணம் முடித்து என்னுடன் இந்த சிறிய வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
சாதாரண தொழிலாளியாக வேலை பார்க்கும் எம்.சி. இஸ்சடீன் தெரிவிக்கும் போது,
எம்.சி.இஸ்சடீன் – தொழிலாளி
இங்கு ஒரு குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். அதைவிட ஒரு வீட்டில் நான்கு குடும்பங்கள் உள்ளன. வாழ்க்கையை கொண்டு செல்லும் போது பெரும் கஷ்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
அத்துடன் வாழ்க்கை வழிமுறைகளுக்கு பெரும் கஷ்டம் உள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கை முறைக்கு பெரும் அளெகரியம் உள்ளது.
நாம் எமது கலாச்சார முறையில் வாழுவதற்கு ஆசைப்படுகின்றோம். அதோபோல் பிள்ளைகளையும் நல்ல வாழ்க்கை முறைக்கு வாழ வைக்க நாம் ஆசைப்படுகின்றோம்
இங்கு எமது பகுதியை பார்வையிடவரும் அரசியல்வாதிகளும் ஏனையோரும் தேர்தல் காலங்களில் வந்து வீடுகளை கட்டித்தருவதாக பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு செல்கின்றனர். அதைவிட உங்களுக்கு அந்தப் பகுதியில் தொடர்மாடி அமைக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் தொடர்மாடி அமைக்கப்படுகின்றது என்று இங்கு வரும் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவரை இங்குள்ள மக்களுக்கு எவ்வித வீடுகளும் கிடைத்ததாக இல்லை.
சுகாதாரமே எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சுகாதாரம் பெரும் பிரச்சினையாக உள்ளது. நாங்கள் வாழும் பகுதியிலேயே எமக்கு வீட்டுத் திட்டமொன்றை அமைத்துத் தந்தாலும் நாங்கள் இங்கேயே வாழ முடியும்.
அல்லதுபோனால் இது தான் உங்களின் நிரந்தர இடம் என்று ஆதாரபூர்வமாக தெரிவித்தாலும் நாங்கள் இங்கேயே நிரந்தர வீடுகளை அமைத்து வாழ முடியும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறு வீடுகள் மற்றும் தமது சொந்த நிலங்களை இழந்த பல மக்கள் பல்வேறு பிரதேசங்களிலும் பல அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளையும் ஏனையோரின் வாக்குறுதிகளையும் நம்பி கனவுலகில் வாழ்ந்து காலத்தைக் கடத்துகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு கொழும்பு மட்டக்குளி- காக்கைதீவு பகுதியில் வாழும் இந்த மக்களின் பல வருட கனவாகவுள்ள வீடு, மற்றும் அவர்களுக்கான நில உரிமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொஹமட் ரஸீ