விளை நிலத்தில் தனது திருமண விருப்பத்தை தெரிவித்த ஜெர்மனி விவசாயியின் நிலம் கூகுள் வரைபடத்தில் முக்கிய இடமாக தெரியும் சம்பவம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் ஹட்டென்பெர்க் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெஃபென் ஸ்வார்ஸ் (வயது 32). பகுதி நேர விவசாயியான இவர் தனது மனதை கவர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அந்த விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க வித்தியாசமான முயற்சியை கையாண்டார்.
தனது விளை நிலத்தில் என்னை திருமணம் செய்து கொள்வாயா என மிகப்பெரிய எழுத்துக்களை வரைந்து, அப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் விதை தூவினார். பயிர்கள் வளர்ந்த நிலையில், விதைகள் தூவப்படாத அந்த பகுதி மட்டும் ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா’ என காலி நிலமாக காட்சியளித்தது. இதையடுத்து தனது காதலியை பறக்கும் சிறிய விமானமான ட்ரோன் மூலம் அப்பகுதியை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்டெஃபானின் செயலைக்கண்டு ஆச்சரியமடைந்த அந்த பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், திருமண விருப்பத்தை தெரிவித்த அவரது நிலம், கூகுள் எர்த் வரைபடத்தில் காணப்பட்டது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்வார்ட்ஸ் தெரிவித்தார்.
‘கூகுள் எர்த் நிறுவனத்தில் எனது விளைநிலம் காணப்படுவதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். கனடாவில் வசிக்கும் எனது அத்தை, செயற்கைக்கோள் கேமரா புகைப்படத்தை ஆன்லைனில் கண்டறிந்த பின்னர் எனக்கு ஸ்கிரீன் ஷாட் செய்து அனுப்பினார்’ என கூறினார்.