செவ்வாய் செல்லும் ரோபோவுக்கு 4.98 கோடி ரூபாய் பரிசு

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நடத்திய ரோபோ தயாரிக்கும் போட்டியில், முதல் பரிசு பெற்ற ரோபோவை உருவாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் அணிக்கு, முதல் பரிசாக, 4.98 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது.

செவ்வாய் போன்ற கிரகங்களை ஆராய்வதற்கும் அவற்றின் மேடு பள்ளங்களில் பயணித்து, அங்குள்ள கல், மண் மற்றும் தாதுக்கள் போன்றவற்றை பத்திரமாக எடுத்து ஆராயவும் உதவும் சாமர்த்தியமான ரோபோவை வடிவமைக்க, நாசா ஒரு போட்டி நடத்தியது.

2012ம் ஆண்டில் துவங்கி நடந்த பல கட்ட போட்டியில், அமெரிக்காவிலுள்ள மேற்கு வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் அணி முதல் பரிசை வென்றுள்ளது.

இந்த போட்டியில் கல்வி நிலையங்கள் முதல், தொழில் முனைவோர் வரை, 50 அணியினர் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில், நாசா விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கையான களத்தில் ரோபோக்கள் போட்டியிட்டன.

கரடு முரடான இந்த களத்தில் வெற்றி பெற்ற ரோபோ, விதிப் படி, 10 மண் மாதிரிகளை சுயமாக, எவர் உதவியும் இன்றி எடுத்து வந்து காட்டியது.

‘இந்த போட்டியில் பங்கேற்றவர்கள், பரிசுத் தொகைக்காக மட்டும் போட்டியிடவில்லை. இவர்களது முயற்சிகள், ரோபோவியலை மேம்படுத்தக் கூடியவையாக அமைந்திருந்தன’ என்று நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.