இளைஞர்களின் பெரும் சக்தி!

அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றியும்கூட. இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவருக்குப் பக்கபலமாக ஒரு இளைஞர் கூட்டமே படுதீவிரமாகப் பணியாற்றியிருக்கிறது. கேஜ்ரிவால் கலந்துகொண்ட ஒவ்வொரு கூட்டத்தையும் ஒருங்கிணைத்தவர் அஸ்வதி முரளிதரன். கேஜ்ரிவாலுடன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் கைகோத்த பிரித்வி ரெட்டி இன்னும் அவர் கூடவே பயணிக்கிறார். தேர்தல் நன்கொடைகள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு இரண்டையும் ப்ரித்வி ரெட்டி கவனித்துக்கொண்டார். ஆஆகவின் ஊடகத் தொடர்புகளுக்கான மேலாளராக இருந்த ஜாஸ்மின் ஷா, தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியும் எஸ்தர் டப்லோவும் இணைந்து தொடங்கிய ‘ஜே-பிஏஎல்’ அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஜாஸ்மின் ஷா வேலையை விட்டுவிட்டு ஆஆகவில் இணைந்துவிட்டார். அவர் வகுத்துக்கொடுத்த திட்டம்தான் கேஜ்ரிவால் நடைமுறைப்படுத்திய ஒரே பயணச்சீட்டில் பொதுப் போக்குவரத்துத் திட்டம். பிரச்சார மேலாளரான கபில், அமெரிக்காவில் படித்தவர்; வாக்குச்சாவடிகள் இவரது பங்கு. சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்தவர் ஹிதேஷ் பர்தேஷி. ஆஆகவின் தேசிய செய்தித் தொடர்பாளரான ப்ரீத்தி ஷர்மா மேனன் மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் ஒரு மாத காலமாக டெல்லியிலேயே தங்கி, தேர்தல் பிரச்சாரங்களின் ஒவ்வொரு பிரிவையும் ஒருங்கிணைத்தார். இவர், மும்பையில் பெண்களுக்கான கார் சேவையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். கேஜ்ரிவாலுடன் தேர்தல் பணியில் பின்னின்றவர்களில் பலர் இளைஞர்கள் என்பதும், உயர்கல்விப் பின்னணி கொண்டவர்கள், நல்ல ஊதியத்தை விட்டுவிட்டு அவரோடு அரசியலில் பயணிப்பவர்கள் என்பதும் மிக முக்கியமான விஷயம். தேர்தலோடு இவர்களது பணி முடிந்துவிடப்போவதில்லை; அரசின் திட்டங்களுக்கான சூத்ரதாரிகளாகவும் இருப்பார்கள். ‘லக்கே ரஹோ கேஜ்ரிவால்’ என்று டெல்லி முழுவதும் பாடல் ஒலிப்பதற்குக் காரணம் இப்படியான பல நூறு இளைஞர்கள் கைகோத்து நிற்பதுதான்.

வாக்குகள் அதிகரிப்பு… வாக்கு வித்தியாசமும் குறைவு…

2015 தேர்தலில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, இந்த முறை 8 இடங்களைப் பிடித்திருக்கிறது. 2015-ல் சராசரி வாக்கு வித்தியாசம் 28,000 ஆக இருந்தது. இந்தத் தேர்தலில் அது 21,000 வாக்குகளாகக் குறைந்திருக்கிறது. பிஸ்வாஜன் தொகுதியில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளிலேயே பாஜக வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறது. ‘பாஜகவின் வாக்கு 32% என்பதிலிருந்து 38% ஆக அதிகரித்துள்ளது. இது நல்ல அறிகுறி்’ என்று கூறியிருக்கிறார் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி. இவர், போஜ்புரி கதாநாயகன், ‘பிக் பாஸ்’ போட்டியாளர், கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்று ஏகப்பட்ட அவதாரங்களுக்குச் சொந்தக்காரர். தற்போதைக்கு வடகிழக்கு டெல்லி தொகுதியின் மக்களவை உறுப்பினர். டெல்லி மாநகராட்சித் தேர்தலின்போது பாஜகவின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகையில், வேட்பாளர்களின் சாதியையும் குறிப்பிட்ட இவரது அணுகுமுறை பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. மனோஜ் திவாரியைப் போலவே டெல்லியின் முதல்வர் வேட்பாளர் ஆக்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட இன்னொருவர் மேற்கு டெல்லி மக்களவை உறுப்பினருமான பர்வேஷ் சிங். முன்னாள் பாஜக முதல்வர் ஷாகிப் சிங் வர்மாவின் மகன் இவர். இவரும் கடுமையாகப் பேசினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்காக இருமுறை தேர்தல் ஆணையம் அவரைக் கண்டித்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமல்ல; பாஜகவும் டெல்லியில் தனக்குத் தலைவரைத் தேடிக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறது.

பூஜ்ஜியமான ராஜ்ஜியம்

பதினைந்து ஆண்டு காலம் டெல்லியை ஆண்ட காங்கிரஸுக்கு, இரண்டாவது முறையாகவும் ஒரே ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. வாக்கு வீதம் 4% ஆகக் குறைந்திருக்கிறது. போட்டியிட்ட 66 உறுப்பினர்களில் 63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். ஷீலா தீக் ஷித்தின் மறைவு, மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோவின் திறமைக் குறைவு, திட்டமிடப்படாத தேர்தல் பிரச்சாரங்கள் என்று ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும் அனைத்தையும்விட மிக முக்கியமானது, காங்கிரஸுக்கு டெல்லியில் வேர்கள் அறுந்துகொண்டிருப்பதுதான். நேரு குடும்பம் தமது கட்சி சீர்திருத்தத்தைத் தலைநகரிலிருந்தே தொடங்க வேண்டும்!