சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 357 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal