உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயினால் பலியானோர் எண்ணிக்கை சீனாவில் 1,113 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
நேற்றைய தகவலின்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,011 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.