2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கேஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 3-ம் முறையாக அவர் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார்.
ஹரியாணாவில் ஒரு நடுத்தரப் பொறியாளரின் குடும்பத்தில் 1968-ம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். கோரக்பூரில் உள்ள ஐஐடியில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் ஜாம்ஷெட்பூரில் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
பின்னர் அரசுப் பணித் தேர்வுக்குத் தயாரானதால் தனியார் பணியை விட்டு விலகினார். கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வசித்த அவர் அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், ராமகிருஷ்ணா மடம் ஆகியவற்றில் இணைந்து சமூகப் பணியாற்றினார்.
அரசுப் பணி
1995-ம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், வருமான வரித்துறையில் உதவி ஆணையரானார். 2000-ம் ஆண்டில் மேல்படிப்புக்காக விடுமுறையில் வெளிநாடு செல்ல முடிவு செய்தார். ஆனால் அரசுப் பணி விதிமுறைகளால் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தார்.
வருமான வரித்துறையில் பணியாற்றிய நிலையில் கேஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சேர்ந்து 1999-ம் ஆண்டு பரிவர்தன் என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர்கள் நடத்தினர்.
2002-ல் மீண்டும் வருமான வரித்துறை பணியில் சேர்ந்த கேஜ்ரிவால், ஓராண்டாக எந்தப் பொறுப்பிலும் நியமிக்கப்படாமல் இருந்தார். 18 மாதக் காத்திருப்புக்குப் பிறகு ஊதியமில்லா விடுப்புக் கோரி விண்ணப்பித்தார். பின்னர் 2006-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.
ஊழலுக்கு எதிரான இயக்கம்
இந்த நிலையில்தான் அண்ணா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2010-ம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய கேஜ்ரிவால், அடுத்த ஆண்டே அண்ணா ஹசாரே, கிரண் பேடி உள்ளிட்டோர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அண்ணா ஹசாரேவின் நெருங்கிய சகாவான கேஜ்ரிவால், பிறகு ஹசாரேவிடம் இருந்து விலகி 2012-ம் ஆண்டில் நேரடிய அரசியலில் கால் பதித்தார்.
எளிமையான தோற்றம், சாமானியர்களை அணுகும் போக்கு, அடித்தட்டு மக்களை ஈர்க்கும் பேச்சு என அரவிந்த் கேஜ்ரிவாலின் செல்வாக்கு உயர்ந்தது. மக்களைக் கவரும் உத்திகள் மூலம் எளிதில் ஈர்ப்புள்ள அரசியல்வாதியானார்.
15 ஆண்டுகளாக தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 31 தொகுதிகளை வென்றது. 8 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் ஆதரவுடன் கேஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியில் அமர்ந்தார்.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று
காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியின் ஊழலை கடுமையாக விமர்சித்தார். இதனால் கேஜ்ரிவாலின் முதல் ஆட்சி 49 நாட்கள் மட்டுமே நீடித்தது. வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ், ஆட்சியைக் கவிழ்த்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தது.
பின்னர் மத்தியில் காங்கிரஸ் தோல்வியடைந்து பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது. 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது கேஜ்ரிவால் மீண்டும் பெரும் வெற்றி பெற்றார்.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
தற்போது 2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கேஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 3-ம் முறையாக அவர் முதல்வர் பதவியை ஏற்கவுள்ளார்.