ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள சர்வதேச மொபைல் கூட்டம் கரோனா வைரஸ் பீதியால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி மொபைல் துறைக்கான உலகின் மிகப்பெரிய கண்காட்சியாகக் கருதப்படுகிறது. இதில் மொபைல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு நிறுவனங்கள், வல்லுநர்கள் பங்கேற்பார்கள். பல புதிய மொபைல் மாடல்களும், எதிர்காலத் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
தற்போது சோனி நிறுவனமும் தனது அதிகாரபூர்வ வலைப்பூ பக்கத்தில் தாங்கள் இந்த வருடக் கூட்டத்தில் பங்கேற்காமல் அதற்கு பதிலாக தங்களது எக்ஸ்பீரியா யூடியூப் சேனலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டது.
ஜனவரி மாத இறுதியில் ஸ்பெயின் நாட்டிலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இன்னொருவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.