வெள்ளை வான் கடத்தல்- கரன்னாகொடவிடம் விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்றைய தினமும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த விசாரணைகள் 9 மணிநேரமாக நடத்தப்பட்டிருந்ததோடு, மேலதிக விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் கீழ் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய கடற்படைப் பிரிவொன்றுக்கும் கொழும்பில் இடம்பெற்ற மாணவர் கடத்தல் உட்பட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பிருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் நீதிமன்றிலும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதியை நான்காம் மாடியென அழைக்கப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து 9 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

2008 முதல் 2009 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வைத்து மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொழும்பு துறைமுகப் பகுதியிலும், திருகோணமலை கடற்படைத் தளத்திலும் இருந்த ரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவைதைகளுக்கு உட்படுத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாகவே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நேவி சம்பத் என அழைக்கப்படும் கடற்படை அதிகாரி தலைமையிலான இரகசிய கடற்படைப் பிரிவை இயக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்கவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாரினால் இரு தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.