மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ்!

சிட்னியில் நடந்த பிக் பாஷ் டி 20 லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் டி 20 லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 12 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் பிலிப் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 52 ரன் எடுத்து அவுட்டானார். ஜோர்டான் சில்க் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆடியது. அந்த அணியின் நிக் லார்கின் 38 ரன்னும், நாதன் கவுல்டர் நைல் 19 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பிக் பாஷ் டி20 லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.