கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அழைத்து செல்ல சீனாவிடம் அனுமதிக்கோரி காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம்.
இதில் கொண்டு வரப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள், வட ஆஸ்திரேலிய பிரதேசமான டார்வினுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பயன்படுத்தப்படாத கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீனாவிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலியர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க இருக்கின்றனர். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்திருக்கிறார்.
இந்த சூழலில், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரை விட்டு வெளியேற ஆஸ்திரேலிய அரசு ஏற்பாடு செய்யும் கடைசி விமானம் இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே, ஒரு விமானம் மூலம் சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்ட ஆஸ்திரேலியர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தை ஆஸ்திரேலிய அரசு ஏற்பாடு செய்திருந்த பொழுது, நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடக்கூடும் என நம்பி பல ஆஸ்திரேலியர்கள் வுஹான் நகரிலேயே இருக்க முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், வைரஸ் தொற்று பெருமளவில் பரவியுள்ளதால் பல ஆஸ்திரேலியர்கள் தற்போது வெளியேறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
உலகெங்கும் கொரோனா வைரசால் 31,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 636 உயிரிழந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் Hubei மாகாணத்தை(தலைநகரம்: வுஹான்) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.