ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்படுவதற்கு முயற்சித்த முன்னாள் இராஜதந்திரி ஒருவர் முன்னர் ஒருதடவை இவ்வாறு கூறினார். போரின் போது காணாமல்போனோராக அறிவிக்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு நேர்ந்த கதிக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்து இதுவிடயத்தில் மறுப்பைத் தெரிவித்து வருகின்ற ஒரு நீண்டகாலக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாகக் காணாமல்போனோர் என்று வகைப்படுத்தக்கூடியவர்கள் எவருமில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் மாத்திரமே அவ்வாறு காணாமல்போயிருக்கிறார்கள். அல்லது அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதே கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவிவகித்த அரசாங்கத்தில் இறுதிக்கட்டத்திற்கும் (போர் முடிவிற்கு வந்த 2009) அந்த அரசாங்கம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.
போரின் முடிவிற்குப் பின்னரான உடனடி நாட்களில் அரசாங்கத்தின் நிலைப்பாடு சிவிலியன் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதாகவே இருந்தது. அந்தப் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்பதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தது. இனரீதியாகப் பிளவுபட்ட நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானோரிடமிருந்து இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு கிடைத்தது. விடுதலைப்புலிகள் தங்களுடன் இலங்கைப் பாதுகாப்புப்படைகள் நேரடியாக மோதலில் ஈடுபடுவதைக் கடினமாக்கும் ஒரு தந்திரோபாயமாக சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் குறைந்தபட்சம் 3 இலட்சம் குடிமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தியமையின் விளைவாகவே பெருமளவு மரணங்கள் ஏற்பட்டன. குடிமக்களின் இழப்பைக் குறைப்பதற்குப் பாதுகாப்புப் படைகள் தங்களால் இயன்றளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டன. அதனால் கனரக ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் போராளிகள் நடத்தப்பட்ட முறையைப் பொறுத்தவரை, அவர்களில் புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை உலகிற்குக் காண்பிக்க அரசாங்கத்தினால் இயலுமாக இருந்தது.
மனித உரிமைகளில் கவனத்தைக் குவிப்பவர்களினால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கும் மறுப்புத் தெரிவிக்கின்ற போக்கு 2015 இல் ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தான் மாறியது. ஜனாதிபதி ராஜபக்ஷ செய்வதாகத் தோன்றுகின்ற காரியத்தையே உலகின் பெரும்பாலான அரசுகள் செய்வதற்கு நாட்டம் காட்டும். அதாவது நாட்டின் எதிரிகளுடன் சண்டையிடும் போது இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களிலிருந்து ஆயுதப்படைகளைப் பாதுகாக்க அரசாங்கங்கள் முனையும். வெறி பிடித்தவனாக அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் ஈராக் குடிமக்களை வகைதொகையின்றிக் கொலை செய்ததில் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார். அவரது சகபாடிகளான சகவீரர்களே அவரது அட்டூழியத்திற்கு எதிராக விசாரணைகளின் போது சாட்சியமளிக்க முன்வந்த அளவிற்கு அவர் கொடூரமானவராக இருந்தார். அத்தகைய ஒரு அதிகாரிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பளித்து விடுதலை செய்தார். உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஆயுதப்படைகளை அரசாங்கங்கள் பாதுகாக்கின்ற போக்கிற்கு ட்ரம்பின் இச்செயல் மிக அண்மைய உதாரணமாகும்.
ஜெனீவாவிற்கு முகங்கொடுத்தல்
ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில் தீர்மானங்க்ளை எடுப்பவர்களாகத் தாங்கள் இருக்கவில்லை என்பதால் சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தரப்பினர் போரின்போது இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்காகத் தங்கள் மீது தாங்கள் குற்றஞ்சுமத்துவது பற்றி (ராஜபக்ஷ அரசாங்கத் தரப்பினர் வெளிக்காட்டியதைப் போன்ற) அதே கரிசனையைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உண்மையைத் தேடுதல், பொறுப்புக்கூறல், இழப்பீடு வழங்குதல் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை உள்ளடக்கிய செயன்முறை ஒன்றுக்கு இணங்கினார்கள். அதன் பரமவைரியைத் தோற்கடித்த அரசொன்றைப் பொறுத்தவரை இத்தகைய செயன்முறையொன்றுக்கு இணங்குவதென்பது இணையற்றதாகும். ஆனால் இது போரின் இறுதிக்கட்டத்தின் மீதே கவனத்தைச் செலுத்தியதால் பொதுமக்களினாலும், சிறிசேன – விக்கிரமசிங்க அரசின் பெரும்பாலான தலைவர்களாலும் ஆதரிக்கப்படவில்லை. போர்க்குற்றங்களின் தெளிவான பல வெளிப்பாடுகளைக் கொண்டிருந்த போரின் முன்னைய கட்டங்களை அலட்சியம் செய்தவர்கள் நேர்மையற்ற இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது இந்த வெறுப்பிற்குக் காரணமாக அமைந்தது.
1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த 600 பொலிஸாரை விடுதலைப் புலிகள் கொலை செய்தமை, 1996 ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களைக் கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவமுகாம் (போர்க்கைதிகள் என்று ஒருவர் கூடப் பிடிக்கப்படாத நிலையில்) முற்றுமுழுதாக அழிக்கப்பட்டமை போன்ற பாரதூரமான சம்பவங்கள் போரின் முன்னைய காலகட்டங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குச் சான்றாகும்.
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இன்றைய அரசாங்கம் முகங்கொடுத்து, 2015 அக்டோபர் 30/1 தீர்மானத்தை நடiமுறைப்படுத்தல் மற்றும் அதிலிருந்து கிளம்புகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அதன் நிலைப்பாட்டை முன்வைக்கவிருக்கிறது. பலவந்தமாகக் காணாமல் செய்யப்படுவதிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டு அதை அங்கீகரித்தமை போன்ற சில விவகாரங்களில் ஜெனீவா தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தலில் வெற்றி காணப்பட்டிருக்கின்ற போதிலும், வேறு சில விவகாரங்களில் நடைமுறைப்படுத்தல் மந்தகதியிலானதாக அமைந்திருந்தது. சில காணாமல்போனோர் விவகார அலுவலகம் அமைக்கப்பட்டமை (பல்வேறு முட்டுக்கட்டைகளின் விளைவாகக் கண்டுபிடிக்கவில்லை), பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதச்சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தவர்கள் மீது தாக்குதல்க்ளை மேற்கொண்டவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை மேலே கூறப்பட்ட தாமதமான செயற்பாடுகளுக்கு உதாராணமாகக் கூறமுடியும்.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக நீதி விசாரணைப்பொறிமுறை ஒன்றை நிறுவுதல் போன்ற ஏனைய சகல விவகாரங்களில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணாமல்போனவர்கள் மத்தியில் உயிருடன் இருப்பவர்கள் என எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற சர்ச்சைக்குரிய அறிவிப்பை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்தகூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சில வாரங்கள் முன்னதாகக் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இது 2016 இல் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதை ஒத்த அறிவிப்பாகும்.
போரின் முடிவில் சரணடைந்தவர்கள் மற்றும் இலங்கையில் இன்றும் காணாமல் போயிருப்பவர்கள் எல்லோரும் பெரும்பாலும் இறந்து விட்டனர் என்று அவர் கூறியிருந்தார். முன்னாள் பிரதமரின் இந்த கூற்று அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களினாலும், சிவில் சமூகத்தினாலும், சர்வதேவ மனித உரிமை அமைப்புகளினாலும் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டது.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அண்மைய கூற்று தொடர்பாக மகளிர் நடவடிக்கை வலயமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை மிகவும் துணிச்சலானதாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தல்
காணாமல்போன சகலரையும் இறந்து விட்டவர்களாக காணாமல்போனோர் அலுவலகத்தைக் கொண்டு பிரகடனப்படுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை வழங்குவதே அரசாங்கம் வழங்கவிருக்கும் தீர்வு போல தெரிகிறது. ஆனால் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இது ஏற்புடையதாக இருக்கப்போவதில்லை . அவர்கள் தங்களது அன்பிற்குரியவர்கள் (காணாமல் போய் 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்து விட்ட போதிலும் கூட) இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் செய்யப்பட கூடிய பொதுவான பிரகடனம் ஒன்றை அந்த குடும்பங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாது. அவர்கள் காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது இறந்து போனார்கள் என்பன அறிய விரும்புவார்கள்.
1980களின் பிற்பகுதியில் ஜே. வி . பி கிளர்ச்சி காலக்கட்டத்தில் காணாமல்போனவர்களின் நிலைப்பாடும் இதுவேயாகும். எனது சகா ஒருவரின் சகோதரர் 1989 ஆம் ஆண்டில் அரசாங்கக் கொலைக்குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டார். தனத சகோதரருக்கு என்ன நடந்தது என்பதையறிய அவர் தொடர்ந்து விருப்பம் கொண்டவராகவ இருக்கிறார். என்ன நடந்தது என்பது பற்றி அவருக்கு ஓரளவுக்கு சூட்சமமாகத் தெரியும்.ஆனால் அது குறித்து அவருக்கு நிச்சயமில்லை. நடந்ததையறிய அவர் விரும்புகிறார்.உண்மைக்கான தனது தேடலை அவர் நிறுத்தப்போவதில்லை. அதே போன்றதே காணாமல்போன ஆயிரக்கணக்கானோரின் உறவுகளின் நிலை. போர்காலத்தில இடம்பெற்றவைக்காக சிறைவைக்கப்பட்டிருக்கும் சகல இராணுவ அதிகாரிகளையும் விடுதலை செய்யப்போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரங்களில் உறுதியளித்தார். அதனைக் காப்பாற்றுவதில் அவர் விரும்புவார். அதேவேளை இலங்கையர்கள் சகலரினதும் ஜனாதிபதியாக தான் இருக்கப்போவதாகக் கூறிய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் காணாமல் போனோரின் குடும்பத்தவரின் கவலை, வேதனை,மதிக்கப்படுவன உறுதி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. அவர்கள் பொருளாதார ரீதியில் கவனிக்கப்பட வேண்டியவர்களாக இருககின்றார்கள்.வாழ்நாளில் எஞ்சிய காலத்தில் தங்களின் உணர்வதிர்ச்சியில் இருந்து விடுப்பட்டு அவர்கள் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஒருமைப்பாட்டை காட்ட வேண்டும்.காணாமல்போனோரின் மனைவிமாரும், பெற்றோரும் சுகயீனம் காரணமாகவும், வயோதிபம் காரணமாகவும் உண்மையை அறியாமல் ஒவ்வொருவராக மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கலாநிதி ஜெஹான் பெரேரா