இசையமைப்பாளர் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, என்னால் அப்படி செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது:-
இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் என்று எப்படி சொல்ல முடியும்? சுதந்திரமாக இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. ஒரே விஷயத்தை அதே மாதிரி ஏன் திரும்ப செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. மற்றவர்கள் அதே மாதிரி பாடலை உருவாக்கி கொடுக்கலாம். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது. ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குவேன்.
பாடல்கள் நன்றாக இருக்கலாம். அல்லது அந்த பாடல்கள் நன்றாக இல்லாமல் போகலாம். யாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களை பயன்படுத்தித்தான் பாடல்களை உருவாக்குகிறார்கள். அதே ஸ்வரம் என் கைக்கு வரும்போது புதுமாதிரி ஆகிறது. மற்றவர்களின் கைக்குள் போகும்போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி அந்த ஸ்வரம் மாறிக்கொள்கிறது.
இவ்வாறு இளையராஜா கூறினார்.