முல்லை யேசுதாசன் பற்றி ஓவியர் புகழேந்தி!

முல்லை யேசுதாசன் அவர்கள் எழுத்தாளர், திரைக்கலைஞர், ஒளிப்படக் கலைஞர் என பன்முக ஆற்றலாளர்.. என் முதல் தமிழீழப் பயணத்தில் -2004 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் நடைபெற்ற அவருடைய “நீலமாகி வரும் கடல்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அண்ணன் புதுவை இரத்தினதுரை, என் இனியத் தோழர் புலிகளின் குரல் தமிழன்பன் ஆகியோரோடு கலந்து கொண்டேன்..

தமிழீழத்தில் நான் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்வு அது. பல்வேறு வகைகளில் மறக்க முடியாத நிகழ்வும் கூட..

அதன் பிறகான பல பயணங்களில் நிதர்சனம், தமிழீழத் தேசியத் தொலைகாட்சி, சேரலாதனின் இல்லம் என அடிக்கடி சந்தித்த ஒருவர். அதிகம் பேசமாட்டார். எந்நேரமும் எதோ ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பார்.. மிக எளிமையான ஒரு ஆளுமை.

2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒன்றியம் நடத்திய தமிழமுதம் நிகழ்விற்கு தலைமை விருந்தினராக சென்றபோது முல்லைத்தீவு சென்று அவரை அவர் இல்லத்தில் சந்தித்தேன். நிறைய பேசினோம்..

கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் … நந்திக் கடல் என்று பெயர் வரக் காரணம் என்ன என்பது குறித்தும் முல்லைத்தீவு வரலாறு குறித்தும் கேட்டேன். குறிப்புகளை தந்துதவினார்.. தேவைப் படும்போது கேளுங்கள் தருகிறேன் என்றும் கூறினார். முகநூல் தொடர்பிலிருந்தோம்.

இன்று காலையில் அவர் மறைந்தார் என்ற செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

ஓவியர் புகழேந்தி.
07.02.2020