ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, நியூசிலாந்தில் வாழ்ந்து வருபவர் பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதி.
பத்திரிகையாளரான இவர், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலாக அவர் எழுதியிருந்தார்.
ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் கொள்கையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கும் இந்நூலின் 10 பிரதிகளை Ballina Region for Refugees எனும் அமைப்பு ஆஸ்திரேலியாவின் Richmond-Tweed நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள மோசமான நிலைக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பு முகாம்கள் ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது. 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் இப்படி வர முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் வைக்கப்பட்ட்டுள்ளனர். இங்கு இலங்கைத் தமிழ் அகதிகளும் சில இந்தியர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.