கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் 72 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய வைபவத்தின் போது நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் முன்னெடுக்கவிருக்கும் கொள்கைகளை தெளிவாக விளக்கினார்.
இன மற்றும் மதக்குழுக்கள் உட்பட ஒவ்வொரு குழுமத்தினரும் சமத்துவமான உரிமைகளை அனுபவிக்கக்கூடிய இலங்கையொன்றை கட்டியெழுப்பப்போவதாக அவர் கூறினார். ஆனால் ,அதேவேளை சிங்கள பௌத்தர்களின் பரந்துபட்ட மேலாதிக்கத்தின் கீழேயே இந்த உரிமைகளளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை
அவரை பொறுத்தவரை ஏனைய சமூகங்களின் உரிமைகளையும் விட சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் மேலானதாக இருக்க வேண்டும். இது சுதந்திர தின வைபவத்தில் வெளிப்படையாக தெரிந்தது.
அங்கு தேசிய கீதம் சிறிசேன – விக்கிரமசிங்க கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சுத்தந்திர தின வைபவத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பாடப்பட்டதைப் போன்று அல்லாமல் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டது.
>சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுகிற நடைமுறையை நிறுத்தியதன் மூலம் கோத்தபாய ராஜபக்ஷ தமிழர்களுக்கு மேலாக சிங்களவர் முதன்மையும் மேன்மையும் கொண்டவர்கள் என்று மீண்டும் ஒரு தடவை போற்றியிருக்கிறார். தமிழ் மொழி இலங்கைத் தமிழர்கள் , இந்திய வம்சாவளி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட இலங்கை சனத்தொகையின் சுமார் 25 சதவீதமானவர்களின் தாய்மொழியாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தன்னை தமிழர்களும் முஸ்லிம்களும் அல்ல பெரும்பான்மை சிங்களவர்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று அவர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற் கு மறுத்ததன் மூலம் முப்பது வருடங்களாக தனி நாட்டுக்காக ஆயுதப்போராட்ட்டம் நடத்திய தமிழர்கள் மத்தியில் மீண்டும் பிரிவினைவாத உணர்வுகள் மேலோங்குவதற்கு ஊக்கமளிக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சருமான மனோகணேசன் கூறி யிருக்கிறார்.
அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையினால் இறுதியில் நன்மை பெறப்போகிறவர்கள் தமிழ்ப் பிரிவினவாதிகளே என்ற அச்சத்தை மனோகணேசன் வெளிப்படுத்தினார்.
சுதந்திரதின கொண்டாட்டத்தையும் அன்றைய தினம் மாலை ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்து உபசாரத்தையும் தான் பகிஷ்கரித்ததாகவும் மனோகணேசன் தெரிவித்தார்.
கோத்தபாயவின் சுதந்திர தின உரையின் முதல் வசனமே இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு என்பதாக அமைந்தது. இவ்வாறு கூறியதன் மூலம் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கணிசமான சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பு ஒன்று வேண்டுமென்ற தமிழர்களின் 71 வருடகால கோரிக்கையை ஜனாதிபதி கோத்தாபய மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்.
இதுதான் கோத்தபாயவின் சிந்தனைப்போக்காக இருக்கும் என்று தெரிந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திர தின விழாவை பகிஷ்கரித்தது.
ஆனால் சகல சமூகங்களுக்கும் சமத்துவமான வாய்ப்புக்களும் மத சுதந்திரமும் வழங்கப்படும் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதம் அண்மைக்காலமாக அந்நியப்படுத்தப்பட்டுவந்த முஸ்லிம் சமூகத்தை வென்றெடுக்கக்கூடும். தமிழர்களைப் போலன்றி முஸ்லிம்கள் மொழி மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அல்ல மத, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கே கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர்.
கோத்தாவின் அரசியல் உபாயம் சமத்துவமும் சுதந்திரமும் இயல்பில் சமூக, பொருளாதார அடிப்படையிலானவையை தவிர, பிராந்திய மத அல்லது இனத்துவ அடையாளங்களில் வேர்கொண்டவையல்ல என்ற தனது கோட்பாட்டை விளக்கிய ஜனாதிபதி கூறியதாவது; ‘ஒற்றையாட்சி அரசொன்றுக்குள் சகல பிரஜைகளும் சமத்துவமான உரிமைகளை கொண்டிருக்க வேண்டும்.
அன்றும் கூட எமது சமூகத்தில் பொருள் இல்லாதவர்களுக்கும் பொருள் இருக்கின்றவர்களுக்கும் இடையில் பெரியதொரு இடைவெளி இருக்கின்றது. எமது நகர்ப்புறங்களில் கிடைக்கின்ற வசதிகள் கிராமப்புறங்களில் இல்லை. கல்வி வசதிகள் எல்லா பகுதிகளிலும் சமமானவையாக இல்லை.
சுகாதார பராமரிப்பு வசதிகளும் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை . தொழில் வாய்ப்புக்கள் சகல பிராந்தியங்களுக்கும் பரவிக்கிடைப்பதாக இல்லை. இந்த அசமத்துவங்கள் இன அல்லது மத காரணங்களின் விளைவானவையல்ல”
இவ்வாறு கூறியதைத்தொடர்ந்து ஜனதிபதி ராஜபக்ஷ இலங்கையில் ஒற்றையாட்சி அரசுக்குள் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழுவதற்கான உரிமை இருக்கும் என்று உறுதியளித்தார்.
‘சுதந்திரமாக சிந்திப்பதற்கு, சுதந்திரமான அபிப்பிராயங்களை கொண்டிருப்பதற்கு எந்தவிதமான தடையுமின்றி தங்களது அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் எப்பொழுதும் உறுதிப்படுத்துவோம். தமது விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கு எந்தவொரு பிரஜைக்கும் இருக்கின்ற உரிமையை நாம் எப்போதும் மதிப்போம்.
சுதந்திரமாகக் கூடுவதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஊடாக அரசியல் மற்றும் ஆட்சி செயன்முறைகளில் பங்கெடுப்பதற்கு ஒவ்வொரு இலங்கை பிரஜைக்கும் இருக்கும் உரிமையை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் எவரினாலும் கேள்விக்குட்படுத்த முடியாத மனித பிறவிகளின் உரிமைகளாக நாம் கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.
பிரதானமாக சிங்களவர்களினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும், இலங்கையின் சகல சமூகங்களினதும் நலன்களை கவனிக்கின்ற நாட்டுத் தலைவராக செயற்பட போவதாக மீண்டும் அவர் சூளுரைத்தார்.
‘ஜனநாயக நாடொன்றிலே சட்ட பூர்வமான செயன்முறையை தொடர்ந்து தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது அவர் நாட்டின் சகல மக்களினதும் ஜனாதிபதியாகிவிடுகிறார். அவர் தனது பதவிக்காலத்தின் போது முழு இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் அவர் சேவை செய்ய கடமைப்பட்டவரல்ல.
குறிப்பிட்ட சமூகத்தை பற்றி மாத்திரம் அக்கறைக்கொண்ட ஒரு தலைவராக அல்லாமல் சகல பிரஜைகளின் நலன்களை கவனிக்கும் நாட்டு தலைவராக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவன் நான் ஜனாதிபதி என்ற வகையில் நான் இன்று இனம், மதம், கட்சி சார்பு அல்லது ஏனைய வேறுபாடுகளுக்கு அப்பால் முழு இலங்கை தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன” என்று கோத்தபாய ராஜபக்ஷ கூறினார்.
தனதுரையில் அவர் நல்லிணக்கம் என்ற பதத்தை குறிப்பிடவில்லை.ஏனென்றால் சிங்கள தேசிய வாதிகளின் அரசியல் அகராதியில் நல்லிணக்கம் ஒரு கெட்டசொல்.இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து நெருக்குதலை கொடுக்கின்ற மேற்குலக அரசாங்கங்களினாலும், ஐக்கிய நாடுகளினாலும் ஊக்கப்படுத்தப்படுவதே இந்த நல்லிணக்கம் என்று சிங்கள தேசியவாதிகள் கருதுவதே அவர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணம்.தன்னையொரு தேசியவாத – இராணுவ தலைவராக காட்டிக் கொள்ளவும் கோத்தாபய ராஜபக்ஷ விரும்பினார்.சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் போது வழமையான வெள்ளை மேல்சட்டையில் தனது இராணுவ பதக்கங்களையும் தொங்கவிட்டிருந்தார்.
மேற்குலக நாடுகளின் கூட்டணிக்கு வெளியே உள்ள நாடுகளுடன் நெருக்கமான உறவை வளர்ப்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் புதிய வெளியுறவு கொள்கையாகும். சுதந்திர சதுக்க வைபவத்தில் விசேட விருந்தினராக ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஒலெக் சகிகோவ் கலந்துகொண்டதன் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது.
அதிகார பகிர்வில் முரண்பாடுகள். 1980 களில் இந்தியாவின் உந்துதலுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அதிகார பரவலாக்க முறைமையை மறுபரிசீலனைக்குள்ளாக்குவதற்கான திட்டமொன்று தன்னிடம் இருப்பதாக சூட்சமமாக வெளிப்படுத்திய ஜனாதிபதி அதிகார பரவலாக்கலில் மத்திய அரசாங்கததினதும், அதிகாரங்கள் பகிரந்தளிக்ப்பட்ட கட்டமைப்புகளினதும் பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவான கருத்தொருமிப்பு அவசியமானது என்று குறிப்பிட்டார்.
மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கும், அரசின் ஏனைய நிர்வாக அமைப்புக்களுக்கும் இடையில் அடிக்கடி இடம் பெறுகின்ற மோதல்களை குறிப்பிட்ட ஜனாதிபதி நிறைவேற்று அதிகார பீடத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்,நீதிமன்றத்துறைகளுக்கும் இடையே அதிகாரச் சமநிலை பேணப்பட வேண்டியது முக்கியமானது என்று சொன்னார்.
பி.கே.பாலச்சந்திரன்