சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரமும் நலனும் முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைப் பெற்றவர்கள் தவிர எவரும் சீனாவிலிருந்தோ சீனா வழியாக பயணித்தோ ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது.
ஆஸ்திரேலியாவின் இத்தீவிர எல்லைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையினால், பலரது விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனவின் வுஹான் நகரிலிருந்த அழைத்து செல்லப்படும் ஆஸ்திரேலியர்களை, கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்று இரண்டு வாரங்கள் அவர்களை கண்காணிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. முதல் கட்டமாக 89 குழந்தைகள் உள்பட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 243 பேரை கிறிஸ்துமஸ் தீவில் தனிமைப்படுத்தி வைரஸ் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை காணவிருக்கிறது அந்நாட்டு அரசு.
ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து 2,700 கிலோ மீட்டர் தொலைவில் இத்தீவு, அகதிகள் விவகாரத்தில் பெரிதும் பேசப்பட்ட/ பேசப்படும் ஓர் இடமாகும்.
Eelamurasu Australia Online News Portal