கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எனது நிர்வாகம் சீன அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 490 ஆக அதிகரித்துள்ளது.
அதிகம் பாதிக்கபட்ட ஹுபே மாகாணத்தில் மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சீனாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸுக்கு 20,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா உதவும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ”கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீன அரசுடன் எனது நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த அச்சுறுத்தலில் இருந்து சீனாவில் உள்ள எங்கள் குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது நிர்வாகம் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலை பிரகடனம்
20 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளதையடுத்து உலக சுகாதார மையம் உலக சுகாதார நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
சீனாவைத் தவிர்த்து ஹாங்காங்கில் ஒருவரும், பிலிப்பைன்ஸில் இருவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுப் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.