தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை.
மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார்.
இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ஆனால், அவர்களது விடியலுக்கான பேச்சுவார்த்தைகள் 70 ஆண்டுகளாக, நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
எழுபது ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாமே, தோல்வியிலேயே முடிவடைந்து உள்ளன. இவைகள் அனைத்தும், ஏன் வெற்றி பெறவில்லை, ஏன் முறிவடைகின்றன என்பதற்கான ஒற்றைக் காரணம், உண்மையாகவும் நேர்மையாகவும் பேரினவாத அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமையே ஆகும்.
1990இல் பிரேமதாஸ – புலிகள் பேச்சுவார்த்தை, 1994இல் சந்திரிகா – புலிகள் பேச்சுவார்த்தை, 2002இல் ரணில் – புலிகள் பேச்சுவார்த்தை, 2006இல் மஹிந்த – புலிகள் பேச்சுவார்த்தை எனச் சராசரியாக, 1990ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான 30 ஆண்டுகளாகப் புலிகளே, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக அரசாங்கங்களுடான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
இவ்வாறான பேச்சுவார்த்தைகளில், புலிகளது படைபலம், அந்தக் காலங்களில் ஆட்சி புரிந்த அரசாங்கங்களுடன் புலிகளைப் பேச்சுவார்த்தை மேடையில், சம தரப்பாக ஈடுபட அழைத்து வந்தது. இதனால் விரும்பியோ விரும்பாமலோ, புலிகள் இல்லாத பேச்சுவார்த்தைகள், தீர்வுகள் இல்லாத பேச்சுவார்த்தைகளாகக் கருதப்பட்டன.
அதனால், தமிழர் தரப்பின் ஏனைய பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தைகள் செய்ய வேண்டிய தேவையை, ஒருபோதும் ஏற்படுத்தவில்லை.
புலிகளது தியாகம், பலம், கொண்ட கொள்கையில் சற்றும் தளராத போக்கு எனப் பல காரணங்கள், இதற்கான வலுவான காரணங்களாக அமைந்தன.
இவ்வாறான சூழ்நிலையை, ஸ்ரீ லங்காவின் அரசாங்கங்கள் விரும்பாது; விரும்பவில்லை. இந்நிலையில், ஆயுதப் போர் மௌனம் (2009) கண்ட பின்னர், அதற்கான தேவைகளும் அறவே அற்றுப் போயின.
அதன் பின்னர், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏகபிரதிநிதித்துவம் வகித்தது. அதற்கான தமிழ் மக்களது பலம், தமிழ் மக்களது ஆணை என்பவை கூட்டமைப்பிடம் காணப்பட்டன. அதாவது, கூட்டமைப்புக்கு அதற்கான தகுதிகளைத் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.
அன்று, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுப் பேரம் பேசலுக்கான சக்தியை, புலிகளின் ஆயுத பலமும் தமிழ் மக்களது ஆதரவுப் பலமும் புலிகளுக்கு வழங்கியிருந்தது.
பின்னர், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, பேரம் பேசுலுக்கான சக்தியை, கூட்டமைப்புக்குத் தமிழ் மக்களது வாக்குப் பலமும் ஆணையும் வழங்கியிருந்தது.
இவ்வாறாகவே, 1956இல் பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965இல் டட்லி – செல்வா ஒப்பந்தம் என எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியே, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக, அன்றைய காலத்து இலங்கை அரசாங்களுடன் பேச்சுகளில் ஈடுபட்டது; ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டது. இதற்கிடையே, இன்று காணப்படுவது போல, ‘ஆயிரத்தெட்டு’ கட்சிகள் அன்று தமிழ் மக்கள் மத்தியில் காணப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகக் கூட்டமைப்பு தொடர்ந்து இய(விள)ங்குவதை, பேரினவாத அரசாங்கங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை; விரும்பப்போவதில்லை.
தமிழ் மக்கள் ஓர் அணியாக, ஒரே குரலாக, ஒரு கோரிக்கையை முன் வைக்கும் போது, அதன் மதிப்பும் கௌரவமும் உயர்வானது; தனித்துவமானது. அதைத் தட்டிக் கழிப்பதோ, சாட்டுப்போக்குச் சொல்வதோ சற்றுச் சிரமமானது.
ஆகவே, ஒற்றுமையாக ஒன்றுபட்டு, தமிழ் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் போது, அதைச் சர்வதேசமும் உற்று நோக்கும். சர்வதேசம் தமிழ் மக்களது கோரிக்கைகள் தொடர்பாக, எவ்வித கரிசனையும் காட்டாது எனக் கூறினாலும், அது கண்காணிக்கும் என்பது உறுதி.
இவ்வாறாக, தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக்கட்சி, அன்றைய இலங்கை ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்திய தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே (சமஷ்டி முறைமையிலான தீர்வு), இன்றும் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியை முதன்மைக் கட்சியாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்றைய அரசாங்கத்துடன் உரையாட விரும்பும்; விரும்புகின்றது.
ஆனால், தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தமான மாகாண சபை முறைமையில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கூட, ஆட்சியாளர்கள் வழங்கத் தயாராக இல்லை.
இந்நிலையில், தமிழ் மக்கள் சார்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை மலினப்படுத்தும் நோக்கோடு, திசை திருப்பும் நோக்கோடு, அனைத்துத் தமிழ்த் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்து இருக்கலாம்.
ஏனெனில், ஒரு தமிழ்க் கட்சி, சுயாட்சி வேண்டும் எனக் கோரும்; பிறிதொரு கட்சி, மாகாண சபை போதும் எனக் கூறும்; இன்னொரு தமிழ்க் கட்சி, மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி எனக் கூறும்; இன்னொரு கட்சி, அரசியல் அமைப்பில் மாற்றம் தேவை எனக் கூறும்; பிறிதொரு கட்சி, தற்போதைய ஒற்றை ஆட்சியே சிறந்தது எனக் கூறும்.
இவ்வாறாக, ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் ஒவ்வோர் அரசியல் யோசனைகளை முன்வைக்கும். இதனால், தமிழ் மக்களது அரசியல் கோரிக்கை பலம் இழக்கும். தமிழ்க் கட்சிகளே, தங்களது அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் தெளிவற்றுக் குழப்பமான சூழ்நிலையில் உள்ளார்கள் என, அரசாங்கம் உலகத்துக்கு உரைக்கும்.
இது, இனப்பிணக்கு தொடர்பிலான தீர்வு முயற்சிகளை, ஒன்றும் இல்லாமல் செய்யவும் காலம் கடத்தவும் ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாக அமையலாம். ஆகவே, எங்கள் தலையில் மண்ணை வாரி அள்ளிக் கொட்ட நாங்களே தயாராக உள்ளோமா?
காட்டில் வேகமாக வரும் சிங்கம், திடீரென நின்று, ஒரு கணம் பின்புறமாக உற்றுப் பார்க்கும். இந்தப் பார்வையை ‘அரிமா நோக்கு’ என்று கூறுவார்கள்.
அதுபோலவே, ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும், ஒரு கணம் தங்கள் தமிழினம் அனுபவிக்கின்ற வேதனைகளை, ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
“பல கட்சிகளிடத்தில் இருந்து, மக்களால் தெரிவு செய்யப்பட்டு, உள்ளூராட்சி மன்றத்துக்கு வந்திருக்கும் நீங்கள் மக்களுக்குச் சேவையாற்ற வந்தவர்கள்; நீங்கள் கட்சி பேதமின்றி, மக்களுக்கு ஒன்றுபட்டுச் சேவையாற்றும் போதுதான், நாங்களும் உங்களுடன் இணைந்து சேவை செய்ய முடியும்” என, வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தெரிவித்து உள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு, கிராமத்தின் வளர்ச்சிக்கு உழையுங்கள் என, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்படுபவர்கள், அங்கு வேண்டாத வெட்டிப் பேச்சுகளில் ஈடுபடுகின்றார்கள்; கருத்து மோதல்களிலும் கைகலப்புகளிலும் கூட ஈடுபடுகின்றார்கள்.
போரின் பாதிப்புக்கு உள்ளான ஒரு சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்குள் முட்டி மோதுவதும், வெட்டியாகப் பேசிக் கொள்வதும் வெட்கக் கேடானது.
இன்று, ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக உழைக்க முடியாதவர்கள், எவ்வாறு நாளை மாகாணத்தின் வளர்ச்சிக்காக, மாகாண சபையிலும் தேசத்தின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்திலும் ஒற்றுமையாக நடந்து கொள்வார்கள்? இவர்கள், கன்னை பிரித்து செயற்பட்டால், எவ்வாறு ஏகபிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்?
இன்று பாடசாலைகளில், ‘விளையாட்டுப் போட்டி’ என்ற வார்த்தை பயன்படுத்துவது இல்லை. ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, பாலர் வகுப்புத் தொடக்கம், பல்கலைக்கழகம் வரை அணியாகச் செயற்படுவதற்கான தேவையை, உத்தியை, பண்பை வளர்க்க உதவுகின்றது.
இந்தப் பண்பு, கலாசாரம் தமிழர் தம் அரசியலில், அறவே மருந்துக்கும் இல்லை. ஆனால், காலங்காலமாக மாறாமல் இருக்கும் நிலையை, மாற்ற வேண்டும். வரலாறு படிக்கவும் இல்லை; வரலாறு படைக்கவும் தயார் இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.
எனவே, வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளுக்குக் கடிவாளமிட எம் மதத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள், புத்திஐீவிகள் உடனடியாக அணி திரள வேண்டும்.
தமிழ்க் கட்சிகள் வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்ற அபாய நிலையைத் தவிர்க்க, உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும்.
தனியாகத் தங்களுக்குள் பிரிவினைகள் இருந்தாலும், அணியாக எங்களுக்காகச் (தமிழ் மக்கள்) செயற்படுகின்ற நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். ஏனெனில், இது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போர் அல்ல; தமிழ் மக்களின் விடியலுக்கான போராட்டம் ஆகும்.
காரை துர்க்கா