ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது.
இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்களைக் கவுரவிப்பதற்காக நாம் ஒன்று கூடி இருக்கிறோம். தொடர்ந்து இந்த கருப்புக் கோடை காலத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வோம்” என்றார்.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 33 பேர் பலியாகினர். கோலா கரடி, கங்காரு உட்பட பல அரியவகை விலங்கினங்கள் பலியாகின. மேலும் ,5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய காட்டுத் தீயை அணைப்பதில் திட்டமிட்டுச் செயல்படாத காரணத்திற்காக ஸ்காட் மோரிசன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.