தமிழில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷுடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything – KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில், ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன் (Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற பிரபலமான ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் (Brandon T Jackson) நடித்துள்ளார்கள். ரிக்கி பற்செல் (Ricky Burchell) இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
ஏழ்மையில் வாடும் ஒரு ராப் (Rap) பாடகனின் கதைதான் ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின், அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.
இந்த சுவாரசியமான கதை அமெரிக்காவில் உள்ள நேஷவில் (Nashville) என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.