வட இந்தியாவில் தமிழர்களை மதிக்கிறார்கள்!

வட இந்தியாவில் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள் என்று நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஜீவா நடிப்பில் சீறு படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இது தவிர ஜீவா நடிப்பில் களத்தில் சந்திப்போம், ஜிப்சி, 83 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஜீவா அளித்த பேட்டி:
சீறு படம் பற்றி?
இது முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் படம். படத்தில் 6 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. மயிலாடுதுறையில் கொக்கரக்கோ டிவி என்னும் கேபிள் சேனல் நடத்தும் இளைஞனாக வருகிறேன். அதில் உள்ளூரில் இருக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றியும் பேசுவேன். அதனால் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் மோதல் ஏற்படுகிறது. அதன் பின் இன்னொரு பிரச்சினைக்காக நகரத்துக்கும் செல்கிறேன். அண்ணன் தங்கை, நட்பு என்று செண்டிமெண்ட் கலந்த மசாலா படம் தான். இரண்டாம் பாதியில் பெண் கல்வி பற்றி ஒரு முக்கியமான பிரச்சினையை தொட்டுள்ளோம்.
ஜீவா
15 ஆண்டுகளாகியும் அதே இளமையுடன் இருப்பது எப்படி?
இளமைக்கும் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கும் என் குடும்ப வழிமுறை காரணமாக இருக்கலாம். கடவுள் தான் காரணம். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன்.
83 பட நிகழ்ச்சியில் கலகலப்பாக ஆடிய அனுபவம்?
எல்லாம் ரண்வீர் சிங்கையே சேரும். சினிமா என்பதே பொழுதுபோக்கு தான் என்னும்போது சினிமா நிகழ்ச்சியும் பொழுதுபோக்காக இருக்கட்டுமே என்று கலக்கிவிட்டார். 83 படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். வட இந்தியாவில் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள். சினிமாவுக்கு இருந்த மொழி எல்லைகள் நீங்கிவிட்டது. நம்முடைய நட்சத்திரங்களை வடக்கில் கொண்டாடுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடிய அனுபவம்?
நான் பெரிய கிரிக்கெட் பிளேயர் இல்லை. ஆனால் சிசிஎல், தெருவில் ஆடிய அனுபவம் தான். ஸ்ரீகாந்த் வேடத்துக்காக அணுகினார்கள். சம்மதித்த பிறகு வொர்க் அவுட்டில் என் எடையை சுமார் 15 கிலோ குறைத்தார்கள். அப்படியே உடல் பிட்டாகிவிட்டது. எனக்கு இந்தி தெரியாததால் பயந்தேன். லைவ் டப்பிங் வேறு. இந்தி அதிகம் தெரியாத ஸ்ரீகாந்த் வேடம் என்பதால் இயல்பாக அமைந்துவிட்டது.